முத்துக்கள் முப்பது -சங்கடங்கள் நீக்க வா! சங்கத் தமிழ் மூன்றும் தா!!

விநாயகர் சதுர்த்தி 10-9-2021 வெள்ளிக்கிழமை

நம்முடைய இந்து சமயத்தில் பற்பல பண்டிகைகள் உண்டு. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு காரணம். அந்தக் காரணங்களைச் சிந்திக்காமல் பண்டிகைகள் கொண்டாடும் போது சுவை குறைவாகவே இருக்கும். காரணங்களைத் தெரிந்து கொள்ளும் பொழுது முன்னிலும் ஈடுபாட்டோடு பண்டிகைகளைக்  கொண்டாட முடியும்.கீரையை நமது முன்னோர்கள் உணவில் சேர்த்துக் கொள்ளச் சொன்னார்கள். அதனால் நாம் அதைத்  தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். இது ஒரு வகை.

கீரைகளில் பலவிதமான வைட்டமின்கள் இருக்கின்றன. என்னென்ன கீரையைச்  சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் ஏற்படும்? பொன்னாங் கண்ணிக்கீரை கண் பார்வைக்கு நல்லது. கரிசலாங்கண்ணி உடம்புக்கு நல்லது. வல்லாரை நினைவுத்திறனுக்கு நல்லது. மணத்தக்காளி சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஏற்படாமல் இருக்கும் என்று அதன் முக்கியத் துவத்தை தெரிந்து கொண்டு, உணவில் சேர்த்துக் கொள்வது என்பது இரண்டாவது வகை. இதில் எது சிறந்தது? இரண்டாம் வகைதான்.

அதைப்போல பண்டிகையின் பின்னணி, நோக்கம் போன்றவற்றை அறிந்து கொண்டு கொண்டாடுவது மிகவும் சிறப்பானதாகும். அவ்வகையில் “விநாயகர் சதுர்த்தி” குறித்து பல்வேறு செய்திகளைத் தொகுத்து, ‘‘முத்துக்கள் முப்பது” என்கிற தலைப்பில், விநாயகர் சதுர்த்தி விருந்தாக பரிமாறுகி றோம். விருந்து சுவைக்க உள்ளே நுழைவோம்.

1. ஆறு சமயங்களில் ஒன்று

நமது இந்து சமயங்களில், எந்தக் கடவுளை முதன்மைக் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்றார்களோ, அதைக்கொண்டு அந்தந்த சமயத்தைப் பிரித்திருக்கிறார்கள். அந்த வகையில் விநாயகப் பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயமாக காணாபத்தியம் இருக்கிறது. கணபதி வழிபாடு, சைவ சமயத்தின் ஒரு பகுதியாகவே  ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து இருக்கிறது. இது பற்றிய குறிப்பு ஆனந்தி கிரியால் எழுதப்பட்ட சங்கர திக்விஜய (ஆதிசங்கரரின் வாழ்வு) எனும் நூலில் காணப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டில் கணபதி வழிபாடு அதன்  உச்ச நிலையை அடைந்து, விநாயகருக்காக கோயில்களும் கட்டப்பட்டன. இவற்றுள் மிகப்பெரியது தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில்.

பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில்களில் சில: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில், கர்நாடகாவின் சரித்திர புகழ் வாய்ந்த ஹம்பி நகரத்தில் ஹேமகூட மலையடிவாரத்தில் சாசிவேகாலு கணேசா கோயில், மகாராஷ்டிராவின் மிகவும் புகழ்பெற்ற விநாயகர் கோயில்களில் ஒன்றாக அறியப்படும் தக்டுசேட் கணபதி கோயில், மும்பையின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான சித்தி விநாயக் மந்திர், பெங்களூரில் உள்ள பசவனகுடி எனும் பகுதியில் புகழ்பெற்ற காளைக்கோயிலுக்கு வெகு அருகில் தொட்ட கணபதி கோயில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான கொட்டாரக்கராவில் மஹாகணபதி கோயில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காணிப்பாக்கம் எனும் கிராமத்தில் காணிப்பாக்கம் விநாயகர் கோயில் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

2. கணபதி வழிபாட்டுக்குச் சொல்லப்படும் ஆதார நூல்கள்

ஒரு சமயம் அல்லது வழிபாடு எனில், அதற்கு மந்திர வழிபாடு, பலன்கள் குறித்த ஆதார நூல்கள் வேண்டும். கணபதி வழிபாட்டுக்கு உள்ள நூல்கள் கணபதி உபநிடதம், கேரம்ப உபநிடதம், சுப்ரபேத ஆகமம், விநாயகர் கவசம், விநாயகர் அகவல், கணேச பஞ்சரத்தினம், கணேச புராணம், முத்கலபுராணம், மகா நிர்வாண தந்திரம், வெற்றி வேட்கை, பிள்ளையார் கதை, முத்தவினாயகர் திருவிரட்டை மணிமாலை முதலிய நூல்கள் கணபதி வழிபாட்டின் சிறப்பைச் சொல்லும் நூல்கள்.

3. எல்லா பூஜையிலும் கணபதி பூஜை

வேறு தேவதைகளுக்கு இல்லாத ஒரு முக்கியத்துவத்தைப் பிள்ளையாருக்கு கொடுத்திருக்கிறார்கள். தீபாவளி கொண்டாடுகிறோம். சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறோம். வீட்டில் பல விதமான சடங்குகள், ஹோமங்கள் செய்கிறோம். எந்தச் சடங்கு செய்தாலும், முதலில் விநாயகரை வணங்கிப் பூஜை செய்துவிட்டு, அதற்குப் பிறகுதான் மற்ற பூஜைகளைத்  தொடங்குகிறோம். அதனால் விநாயகர் பூஜையில் மற்ற தெய்வங்களின் பூஜை இல்லை. ஆனால், மற்ற தெய்வங்களின் பூஜையில் விநாயகர் பூஜை உண்டு.

4. பிள்ளையார் பிடிக்க குரங்காய்

நமது வழிபாட்டு மரபில் முதல் பூஜை விநாயகருக்குத்தான். மஞ்சள், சந்தனம், மண், சாணம் என்று பிடித்து வைத்து துவக்குவார்கள். அதனால் தான் ‘‘பிள்ளையார் பிடிக்க” என்கிற வார்த்தை வந்தது. அல்லது ‘‘பிடித்து வைத்த பிள்ளையார்” என்று வந்தது. வழிபாடு நிறைவு பெறும் பொழுது ஆஞ்சநேயரைத் துதிப்பார்கள். நமது பூஜைக்கான பலனை பிள்ளையாரும்,  ஆஞ்சநேயரும்  முதலாகவும் முடிவாகவும் பாதுகாப்பாக நின்று தருவதால், ‘‘பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடியும்” என்று வந்தது. பிள்ளையார் வழிபாட்டோடு தொடங்கும் முதல் ஆரத்தி, ஆஞ்சநேயருக்கு  மங்கள ஆரத்தி  செய்து நிறைவு பெறும்.

5. பிள்ளையாரின் திருவடிவச் சிறப்பு

ஓம்கார பொருளான உயர் வடிவமே கணபதி. அவர் போதாந்தப் பெரு வடிவம். நாதாந்தத் திருவுருவம். கலைகளுக்கெல்லாம் கவினுறு அடையாளம். வித்தைகளுக்கு நாயகனாக விளங்கும் விநாயகனை தொழுவோர்க்கு கலங்காத பெருவாழ்வு கச்சிதமாய் வசப்படும். நம் கனத்தை எல்லாம் தன் கனமாக தாங்கிடவே யானை வடிவம் கொண்டு பூமியை ஆள்கிறார். அவரை வணங்கினால் அற்புதங்கள் நிகழும்.

இதைச்  சொல்லும் பாடல் இது.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

6. அரசமரத்தடி போதும்

உலகிலேயே மிக எளிய வழிபாடு பிள்ளையார் வழிபாடு தான். புஷ்பங்கள் கூடக் காலம் பார்த்துத் தான் பூக்கும். ஆனால் அனைத்து இடங்களிலும் அனைத்து காலங்களிலும் அறுகம்புல் கிடைக்கும். கையிலே எப்படி வருகிறதோ, அப்படியே பிடித்து, ‘‘பிள்ளையாரப்பா இதில் வந்து அமர்ந்து என் வினைகளைத் தீர்ப்பாய்” என்று நெஞ்சு உருகி வேண்டினால், அந்தப் பொருளையோ, உருவத்தையோ பார்க்காமல், பிடித்தவன் மனம் பார்த்து வந்தமர்ந்து அருள்புரிவார், அவருக்கு பிரம்மாண்டக் கோயில்கள் தேவையில்லை, ஒரு ஆலமரம், ஒரு அரசமரத்தடி போதும்.

7. சிதறு தேங்காய் வழிபாடு

பிள்ளையாருக்கு உள்ள எத்தனையோ வழிபாடுகளில் சிதறு தேங்காய் அடித்து வழிபடுவது முக்கியமானது. தேங்காய் ஓடு கனமாக இருக்கும். அதுபோல் நமக்கு வரும் பிரச்சனைகளும் கனமாக இருக்`கும். பிள்ளையாரை வணங்கி வழிபட்டு, உருண்டு திரண்ட நம் பாவங்கள் விநாயகர் அருளால் உடைந்து சிதறுவதாக நினைத்து, ஓங்கி அடிக்க வேண்டும். தேங்காய் சில்லு சில்லாக சிதறுவதன் மூலம் நம் வினைகள்  தீர்ந்ததாகக்  கருதிக் கொள்ள வேண்டும்.

8.  நம் சுழி மாற்றி நலம் கொடுக்கும் பிள்ளையார் சுழி

பிள்ளையார் சுழி என்பது பிரணவ மந்திரத்தின் குறியீடுதான். பிள்ளையார் பூஜையோடு எதனையும் தொடங்குவது போல பிள்ளையார் சுழியோடு எதையும் தொடங்குவது மரபு. எந்த இடையூறும் இல்லாமல்  காரியங்கள்  முடிய விநாயகர் பூஜையைச் செய்வதைப்போல, எதை எழுதத் தொடங்கினாலும் முதலில் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகின்றோம்.  நம் சுழி (அதாவது தலையெழுத்து) எப்படி இருந்தாலும், பிள்ளையார் சுழி அதை மாற்றி நலம் கொடுக்கும்.

9. எலியா வாகனம்?

நம்முடைய தெய்வங்களின் வாகனங்களைப்  பற்றிச்  சிந்தித்தால் பல உண்மைகள் தெரிய வரும். கேலியாகத் தெரிந்த விஷயங்களின் உட் கருத்துக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். பிரம்மாண்டமான யானை உரு வம் கொண்ட பிள்ளையாரை, மிகச்சிறிய உருவமான எலி வாகனம் தாங்குமா? என்று கேள்வி கேட்கலாம். இதை “அசதி ஆடல்” வகையில் (யானையை எலி இழுத்தோடுகிறது பார்) என்று காளமேகப் புலவரும்  பாடுகிறார். எலி பிள்ளையாரைத் தூக்குவது இருக்கட்டும்.

நாம் பிள்ளையாரை தூக்குகிறோமே! நம் வீட்டுக் குழந்தைகள் தூக்குகிறார்களே! அப்படியானால், பிள்ளையாரை விட நாம் சக்தி படைத்தவர்கள் அல்ல. நாமும் தூக்கும் படியாக இருக்கிறோம் அல்லது அவனைத் தூக்கும் சக்தி நமக்குத் தருகிறான் என்றே பொருள்.  விநாயகர் ஓங்காரப் பிரணவ ரூபி என்ற போது, அது மகா பெரிய அண்டங்களையும் தனதுள்  கொண்ட மகா பிரமாண்ட வடிவமல்லவா. அவருக்கு வாகனம் மூஞ்சூறு. கடவுள் அணுவுக்கணுவாயும், மகத்துக்கு மகத்தாயும் இருக்கிறார் என்பதை உணர்த்த மூஞ்சூறு வாகனமாயிற்று என்பர் பெரியோர்.

10. யானை

யானையின் உருவில் பிள்ளையார் காட்சி தருகிறார். சங்க காலத்தில் யானை வழிபாடு பெரிய அளவில் இருந்தது. அதுவே பின்னர் பிள்ளையார் வழிபாடாக மாறியது என்று ஒரு கருத்தும் உண்டு. அது ஒருபுறம் இருக்கட்டும். மிக வலிமையான யானை மனிதனுக்குக்  கட்டுப்பட்டு இருக்கிறது. அது மனிதனின் வலிமையினால் அல்ல; யானையின் அன்பினால்.  அங்குசம் யானையைக்   கட்டுப்படுத்துகிறது என்பதைக் காட்டவும், யானையின் அனுமதியின்றி யானையிடம் எதுவும் சாதித்துக் கொள்ள முடியாது என்பதைக் காட்டவும், அதைப்போலவே பகவானின் திருவருள் துணையின்றி எதையும் சாதித்துக் கொள்ள முடியாது என்பதைக் காட்டவும், யானையின் உருவில் பிள்ளையார் காட்சி தருகிறார்.

11. யோக கணபதி  வடிவம்

கணபதியின் வடிவங்களில் ஒன்று யோக கணபதி வடிவம். யோகிகளும், ஞானிகளும், முனிவர்களும் வழிபடும் வடிவம் இது. துவாதசி நாளில் இவரை வணங்குவது மிகவும் `சிறப்பு. இவருக்குப் பிடித்த மலர்கள் அறுகு, சங்குபுஷ்பம். பிடித்த நிவேதனம்: அப்பம், வெண்பொங்கல். இந்த கணபதியை வணங்க வேத ஞானத்தைத் தருவார். யோக வல்லமையைத் தருவார்.

12. ஏழைப்பங்காளன்

பொதுவாக சிவபெருமானுக்கும், திருமாலுக்கும் பெரிய ஆலயங்கள் அரச கோபுரங்கள், பிராகாரங்களோடு இருக்கும். பெரிய ஆலயங்களில் கணபதியும் கன்னி மூலையில் இடம்  பிடித்திருப்பார். ஆனால் அதைத் தாண்டி ஒவ்வொரு தெருவிலும், சாலையிலும், ஏழை எளிய மக்களின் வசிப்பிடங்களிலும், ஆறு, குளம், ஏரி கரைகளிலும் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் ஒரே தெய்வம் கணபதி தான். காரணம் பெரிய தெய்வங்களுக்கான சிக்கலான விதிகள், வழிபாடுகள் கணபதியிடமில்லை. ஏழைப்பங்காளனாக  எங்கும் இருந்து அருள் தரும் வடிவம் அவர்.

13. நம்பிக்கைதான் அந்த தும்பிக்கை

யானைத்தலை. பெருத்த வயிறு. மனித உடல். ஐந்து திருக்கைகள். ஒற்றைக்கொம்பு.அவருடைய வடிவத்தில் அக்ரிணை உயர்திணை என்ற இரண்டு அம்சங்களும் உண்டு. மனித அம்சமும் உண்டு. தேவ அம்சமும் உண்டு. விலங்கின் அம்சமும் உண்டு. பூத அம்சமும் உண்டு. ஆணும்  உண்டு. பெண்ணும் உண்டு. எனவே எல்லாம் அடங்கிய ஓர் அற்புத உருவம் விநாயகர். விநாயகருக்கு “ஐங்கரன்” என்று பெயர். அவருடைய அற்புதமே  துதிக்கை தான். பக்தர்களின் நம்பிக்கைதான் அந்த “தும்பிக்கை”. யானையின் பலம் துதிக்கையிலும், மனிதனின் பலம் நம்பிக்கையிலும் உள்ளது.

அந்த துதிக்கை நம்பி, “கை”  துதிக்கும் பொழுது நம்பிக்  ‘‘கை” அதிகரிக்கும். அவருடைய ஐந்து கரங்களிலும் என்னென்ன இருக்கிறது என்பதைப்  பார்க்கலாம். துதிக்கையில் நீர் குடம். பின் இரண்டு கைகளில் பாசம், அங்குசம். வலது கையில் தந்தம். இடது கையில் அமுத கலசம் என்னும் மோதகம். இடது கீழ்க்கை மோதகத்தை வைத்திருக்கும், துதிக்கை அதனைத் தொட்டுக் கொண்டிருக்கும். உயிர்களுக்கு அஞ்சாமையைப் போக்கி இன்பத்தைத் தருவதைக் காட்டும். துதிக்கை ஆன்மாக்களுக்கு பேரின்பத்தை வாரி வீசுவது, பக்தர்களின் உணர்வை அறிந்து கொள்ள உதவுவது துதிக்கையாகும்.

14. நரமுக கணபதி பொதுவாக யானை

முகம் கொண்ட கணபதி சில இடங்களில் மனித முகத்தோடும் காட்சி தருகிறார். அப்படிக் காட்சி தரும் சில இடங்களில் ஒன்று சிதம்பரம். சிதம்பரம் தெற்கு வீதி பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள ஆலயத்தில் அவர் நரமுக கணபதியாகக்  காட்சி தருகிறார். அவருக்கு நேர்ந்து கொண்டு, அபிஷேக அர்ச்சனைகள் செய்தால், நினைத்த காரியம் நடக்கும். திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை கோவிலிலும் நரமுக கணபதி உண்டு.

(நன்றுடையான் விநாயகர் கோயில்) தாயுமானவ ஸ்வாமியை சம்பந்தர் பதிகம் பாடும்போது, ‘யானை’, ‘யானை’ என்றே சொல்லி பாடி முடிக்கிறார்!  ‘நன்றுடையானை, உமையொரு பாகம் உடையானை, திருவுடையானை, சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே!’ இன்னும் மயிலாடுதுறைக்கருகே திலதையில் இருக்கும் கணபதி மனித முகத்தோடு   காட்சி தருகிறார்.

15. உச்சிஷ்ட கணபதி

எத்தனையோ  வடிவங்கள்  கொண்டவர்  பிள்ளையார். ஞானவான்களால், தங்கள்  இதய பீடத்தில் போற்றி வணங்கிக்  கொண்டாடப்படும் வடிவம் உச்சிஷ்ட கணபதி வடிவம். ஆறு திருக்கரங்கள், நீலோத்பவ மலர்,  மாதுளை, நெற்கதிர், வீணை, அட்ச மாலை என இவற்றைக் கையில் தாங்கி, தேவியை இடது மடியில் அமர்த்தித் தழுவிய நிலையில் காட்சி தருவார். இவர்  நிறம் சிறப்பு என்று ஒரு  நூலும், இல்லை கருப்பு நிறம் என்று உத்தர காமிக ஆகமம் போன்ற  நூல்களும் சொல்லுகின்றன. பஞ்சமி திதியில் இவரை வணங்க இல்லறம் இனிக்கும். வெல்லப் பாயசம் இவருக்கான சிறப்பான நிவேதனம். உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட விநாயகர் கோயில் திருநெல்வேலியில் உள்ளது. பிள்ளைப்பேறு  இல்லாதவர்கள் இவரை வணங்கினால் அக்குறை தீரும்.

16. விநாயகரை வழிபட தடைபட்ட திருமணங்கள் நடக்கும்

எல்லா விக்கினங்களையும் தீர்க்கும்  விநாயகர், ஜாதகத்தில் ஏற்படும் திருமணத்தடைகளையும்  நீக்குகிறார். திருமணத்தடைகளுக்கான மிக முக்கிய தோஷங்கள் சர்ப்ப தோஷ நிவர்த்திக்கும் , (ராகு-கேது தோஷத் திற்கும்) அதைவிட முக்கியமான செவ்வாய் தோஷ நிவர்த்திக்கும் பிள்ளையார் வழிபாடு முக்கியம். மஞ்சள் பிள்ளையாரைப்  பிடித்து வைத்து, அறுகம்புல் சாத்தி,

48 நாட்கள் விநாயகர் அகவல் பாராயணம் செய்ய, திருமணத் தடைகள் விலகி, நல்ல வரன் அமையும்.

17. விநாயகருக்கு பிடித்தவை

வெள்ளெருக்கு திரிபோட்டு விநாயகரை வணங்குவது சிறந்தது. செவ்வந்தி, மல்லிகை, அரளி மலர்கள் விநாயகருக்குப் பிடித்தவை. விளாம்பழம், திராட்சை, நாவல் பழம், வாழை, கரும்புத்  துண்டு இவைகள் விநாயகருக்கான நிவேதனங்களில் முக்கியமானவை.

18. நான்கும் விநாயகரும்

நான்கு என்பது அவருக்கு முக்கியமான எண். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்கிற நால்வகை  நிலமே  ஞாலம் என்றும் நானிலம் என்றும் சொல்கிறோம். எண்கணிதத்தில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டத்தை கொடுக்கக்கூடிய ஒரு எண் என்று சொன்னால் அது நான்காகும். அது நான்கு வேதங்களையும், நான்கு யுகங்களையும், நான்கு தர்மங்களையும், நான்கு திசை

களையும் குறிக்கும். அதை பிரதிபலிக்கவே நான்காவது திதியான சதுர்த்தி திதியில் அவதரித்தார் விநாயகர். நாம் நான்கு

தந்தால் அவர் மூன்று தருவார்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்

சங்கத் தமிழ் மூன்றுந்தா.

19. எழுத்தாளர் விநாயகர்

ஒருவர் சொல்லச் சொல்ல, அதனை தெய்வங்கள் படி எடுத்து எழுதிய வரலாறு நம் இந்திய சமய மரபில் மட்டுமே உண்டு. மணிவாசகர் திருவாசகம் பாட, அதை எழுதி, ‘‘இதை தில்லை அம்பலவாணன் எழுதியது” என்று கையெழுத்திட்டார் சிவபெருமான். அவர் திருமகனார் விநாயகர், வியாசர் சொல்லச் சொல்ல ஐந்தாவது வேதமான மகாபாரதத்தைப் படியெடுத்தார். அதற்கு எழுதுகோலாக தன் தந்தத்தையும், எழுதும் பலகையாக மேரு மலையையும் உபயோகித்தார். நல்ல காரியங் கள் செய்யும் பொழுது தெய்வங்கள் நேரில் வந்து துணை செய்யும் என்பதை காட்டவே இத்தகைய சம்பவங்கள். இதனை வில்லிபுத்தூராழ்வார் அற்புதமாகப் பாடுகிறார்.

நீடாழி உலகத்து  மறை நாலோடு ஐந்து என்று நிலை நிற்கவே

வாடாத தவ வாய்மை முனி ராசன் மாபாரதம் சொன்ன நாள்

ஏடாக வட மேரு வெற்பாக வங் கூர் எழுத்தாணி தன்

கோடாக எழுதும் பிரானைப் பணிந்து அன்பு கூர்வாம் அரோ.

20. பிள்ளையார் சுழி

பிள்ளையார் சுழி தத்துவம் குறித்து ஏராளமான செய்திகள் இருக்கிறது. இப்பொழுது ஒரு முக்கியமான விஷயத்தைப் பார்ப்போம். பிள்ளையார் சுழி எப்படி இருக்கிறது. ஒரு வட்டம் (சுழி) அதிலிருந்து வெளிவரும் ஒரு கோடு. இந்த ஜீவாத்மா, பிறப்பு இறப்பு, கர்ம வினை என்னும் வட்டமாகிய, எளிதில் விடுபட முடியாத  சுழியில் சிக்கித்  தவிக்கிறது. ‘‘புனரபி ஜனனம் புனரபி மரணம்’’ என்று பஜகோவிந்தத்தில் இதை ஆதிசங்கரர் பாடினார். இதிலிருந்து ஒரு ஆத்மாவால் தானே முயற்சிசெய்து வெளிவர முடிவதில்லை. அதற்கு ஒரு துணை வேண்டும். “பிள்ளையாரே! இந்தப் பிறவியில், இந்த சுழியை மாற்றி, இந்தக் கோடு வெளிவருவதுபோல் என் ஆத்மாவை வெளியே எடுக்க வேண்டும்” என்கிற பிரார்த்தனை, பிள்ளையார் சுழியில் எதிரொலிக்கிறது. அவன்தான் சுழியிலிருந்து வெளியே எடுக்க முடியும்.

வேறு வகையான விளக்கமும் உண்டு. பிள்ளையார் சுழி போட்டாலே விநாயகரும் வெற்றியும் வந்து விட்டதாகப் பொருள், பிள்ளையார் சுழியில் அ, உ, ம ஆகிய

பிரணவத்தின் கூறுகள் இருக்கின்றன. அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம். கோடு சிவலிங்கம். எதையும் எழுத தொடங்கும் முன், பிள்ளையார் சுழி எழுதுவது எந்த இடையூறுமின்றி காரியங்களை நிறைவேற்றி வைக்கும் என்பதால்தான் போடுகிறோம்.  

21. என்னென்ன படைக்க வேண்டும்?

விநாயகருக்கு என்னென்ன படைக்க வேண்டும் என்பதை ஒரு அற்புதமான திருப்புகழில் பட்டியலிடுகிறார் அருணகிரிநாதர்.

அந்த பாடல் இது. முதற்பகுதி முருகனை பாடி, பிற்பகுதியில் விநாயகரைப் போற்றுகிறார்.

“இக்கவரை நற்கனிகள்

சர்க்கரை பருப்புடனெய்

எட்பொரிய வற்றுவரை இளநீர்

வண்டெச்சில்பய றப்பவகை

பச்சரிசி பிட்டுவெளரிப்பழமி டிப்பல்

வகைதனிமூலம்மிக்கஅடி

சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு

விக்கிநச மர்த்தனெனும் அருளாழி

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்

வித்தகம ருப்புடைய பெருமாளே.”

“கரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்ப வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப் பழம், பல வகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்கு கள், சிறந்த உணவு (வகைகள்), கடலை (இவைகளை) பட்சணமாகக் கொள்ளும் ஒப்பற்ற, வினைகளை நீக்க வல்ல அருட் கடலே! கருணை மலையே! வளைந்த சடையையும், பினாகம் என்னும் வில்லையும் கொண்ட மேலான சிவபிரான் பெற்றருளிய விநாயகனே! ஒற்றைக் கொம்பு (ஒரு கொம்பு மஹாபாரதம் எழுத உடைத்து விட்டார்) உடைய பெருமாளே!” என்பது பொருள்.

22. பதினாறு வகையான பெயர்கள்

விநாயகருடைய மிக முக்கியமான

16 வடிவங்கள், பெயர்கள்.

1. பாலகணபதி, 2. தருண கணபதி,

3. பக்த கணபதி, 4.வீர கணபதி, 5.சக்தி கணபதி,

6.துவிஜ கணபதி, 7.சித்தி கணபதி,

8.உச்சிஷ்ட கணபதி, 9. விக்ன கணபதி,

10. ஷிப்ர கணபதி,  11.ஹேரம்ப கணபதி,

12.லட்சுமி கணபதி, 13. மகாகணபதி, 14.விஜய கணபதி, 15.நிருத்த கணபதி,

16. ஊர்த்வ கணபதி. இந்தப் பெயர்களைச் சொன்னாலே நம் பாவங்கள் கழியும்.நல்வாழ்வு கிடைக்கும்.

23. “கம்”முன்னு இரு, கவலையை விடு

கணபதியின் மூல மந்திரம் “கம்” என்ற வார்த்தையோடு தொடங்குகிறது. சக்திமிக்க மகா கணபதி மந்திரம் இதுதான். “ஓம் ம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் கணபதயே வர வரத சர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா”உலக வழக்கில் சொல்வார்கள் ‘‘கம்முன்னு இரு. கவலையை விடு. அருணகிரிநாதரும் இதுதான் சொல்லுகின்றார் ‘‘சும்மா இரு; சொல்லற’’. செயலற்ற நிலையில் அனைத்தும் செயல் ஆகிவிடும். நாம் என்ன நினைத்து நினைத்தா  மூச்சு விடுகிறோம்? இயல்பாக மூச்சு விடுவது போல, இயல்பாகவே விநாயகரை சிந்தையில் கொண்டு, சும்மா இருந்தால், எல்லாக் காரியமும் பலிதம் ஆகிவிடும். சும்மா இருந்தால் காரியம் ஆகிவிடும் என்றால் ‘‘கம்’’ என்று கணபதியை பற்றிக்கொள். காரியம் ஆகிவிடும் என்று பொருள். கணபதியின் மூல மந்திரத்தை ஜபித்துக் கொண்டிரு என்று பொருள்.

24. அரச மரத்தடிப் பிள்ளையார்

அரசமரமும் வேப்பமரமும் உள்ள இடத்தில் விநாயகர் ஆலயம் இருக்கும். அதைச் சுற்றுவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது. நீராடி நெற்றிக்கு இட்டுக் கொண்டு, காலை 8 மணிக்குள், குறைந்தது ஏழு பிரதக்ஷிணம் செய்ய வேண்டும். எள், வெல்லம் நிவேதனம் செய்யலாம். இதன் மூலம் சனி பகவானின் அருளும் கிடைக்கும். ஏழரைச் சனி போன்ற தொல்லைகளும் விலகும். சனிக் கிழமைகளில் அவசியம் பிரதட்சணம் செய்வது சிறப்பானது. ஆனால், காலை 8 மணிக்குப் பிறகு அரசமரத்தடி பிரதட்சணம் அவ்வளவு சிறப்பானது அல்ல.

25. கொண்டைக்கடலை மாலை

விநாயகருக்குரிய விரத நாட்கள் வார நாட்களில் வெள்ளிக்கிழமை, மாதத்தில் சதுர்த்தி, வருட நிகழ்ச்சிகளில் ஆவணி மாதம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி முக்கியமானது. இந்நாட்களில் விநாயகருக்கு விரதம் இருப்பதன் மூலம் இம்மை நலனையும், மறுமை நலனையும் அடையலாம். இவ்விரத நாட்களில், விநாயகருக்கு தேங்காய் மாலை செய்து அணிவித்தால் புத்திர பாக்கியம் ஏற்படும். அறுகம்புல் மாலை, எருக்கம்பூ மாலை, 108 கொண்டைக் கடலையை தண்ணீரில் ஊற வைத்து கொண்டைக் கடலை மாலையும்  சாற்றலாம். இதனால் துன்பங்கள் விலகி நல்வழி ஏற்படும்.

26. காரியம் வெற்றி பெற எளிதான வழி ‘‘காதைப் பிடி”

விநாயகருக்கு நெற்றியில் குட்டிக் கொண்டு, இரு காதுகளையும் பிடித்து தோப்புக்கரணம் போடுவது என்பது அவருக்கு மட்டுமே செய்யப்படுகின்ற வழிபாடு. பார்ப்பதற்கு ஏன் இப்படி செய்கிறார்கள்? என்று தோன்றினாலும் அதற்குள் ஒரு அருமையான அறிவியல் காரணத்தையும் பொதிந்து வைத்தார்கள். யோக ரகசியத்தையும் வைத்தார்கள். இப்படிச் செய்வதால் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி தட்டி எழுப்பப்பட்டு, சுஷும்னா நாடி திறந்து கொள்கிறது. நெற்றியில் குட்டிக் கொள்வதால், அங்கே உள்ள அமிர்தகலசம் மேலெழும்பி, அமிர்தம் உடல் முழுக்க பரவுகிறது. இதனால் உடம்பில் சுறுசுறுப்பும் புத்தெழுச்சியும் உண்டாகிறது. மனம் ஒருமைப்படுகிறது. செயல்கள் கூர்மைப்படுகின்றன. சிந்திக்கும் திறன் அதிகரிக்கிறது. இத்தனை பலனும் அந்த வழிபாட்டு முறையில் இருப்பதால், ஒரு வேலையைத்  தொடங்குவதற்கு முன், விநாயகரை காது பிடித்து தலையில் குட்டி வணங்கிவிட்டு தொடங்குகிறார்கள்.

27. விநாயகருக்கு உகந்த பத்திரங்கள்

கண்ணன் கீதையில் என்னுடைய

வழிபாடு மிகவும் எளிமையானது.

பத்ரம், புஷ்பம், பலம்,தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி

ததஹம் பக்த்யுபஹ்ருதம் அச்நாமி ப்ரயாத்மன:

என்று சொல்கிறார். இதற்கு காஞ்சிப் பெரியவர் அருமையான விளக்கம் தந்தார்.

“அச்நாமி என்றால் சாப்பிடுகிறேன் என்று அர்த்தம். பூஜை செய்யும் பத்ரத்தை யாராவது சாப்பிடுவாளா? ஆனால், வில்வம், துளசி இரண்டையும் சாப்பிடலாம். அவை மருந்தாகவும் பயன்படுகிறது. புஷ்பங்களில் கதலீ புஷ்பம், வாழைப்பூ ஒன்றுதான் சாப்பிடவும் பயன்படும். பழங்கள் எல்லாவற்றையும் சாப்பிடுகிறோம். தோயம் என்றால் நீர்; இப்படி ஏதாவது ஒரு இலையோ, பழமோ அல்லது ஒரு உத்தரணி தீர்த்தமோ இருந்தால் போதும் நான் திருப்தி அடைந்து விடுவேன் என்றார் கீதையில்.விநாயகரும் அதைப்போலவே எளிமையான வழிபாட்டுக்குச் சொந்தக் காரர். அவருக்கு விருப்பமான பத்திரங்கள் (இலைகள்) உள்ளன.  

முல்லை, வில்வம், இலந்தை, வன்னி, கண்டங்கத்தரி, எருக்கிலை, விஷ்ணுகிரந்தி, தேவதாரு, அரசிலை, கரிசலாங்கண்ணி, ஊமத்தை, அருகம் புல், நாயுருவி, அரளி,  மருதை, மாதுளை, ஜாதி மல்லிகை, அகத்திக் கீரை.

28. பஞ்சபூதங்களும் விநாயகரும்

பஞ்சபூதங்களோடு தொடர்பு கொண்டவர் விநாயகர். யோசித்துப் பாருங்கள். அரச மரத்தடியில் இருக்கிறார். அரசமரம் ஆகாயத்தோடு தொடர்புடையது. வாத நாராயண மரம் வாயுவோடு தொடர்புடையது. வன்னிமரம் அக்னியோடு தொடர்புடையது. நெல்லிமரம் நீரோடு தொடர்புடையது. ஆலமரம் மண்ணோடு தொடர்புடையது. எனவே, பஞ்ச பூதங்களும் விநாயகரோடு தொடர்பு உள்ளவை. பஞ்ச பூதங்களை இயக்குபவர் அவர்.

29. விநாயகர் பெயர் விளக்கம்

விநாயகர் என்றால் தனக்கு மேலே ஒரு தலைவர் இல்லாதவர் என்று பொருள். அவருடைய மந்திரங்களில் ஒன்று  ‘‘ஓம் அனீஸ்வராய நமஹ’’  ஈஸ்வரன் அதற்கு முன்னால் ‘‘அ''எழுத்து சேர்த்ததால், தனக்கு மேலாக ஒரு ஈஸ்வரன் இல்லை என்று பொருள். ஆதிசங்கரர் கணேச பஞ்ச ரத்தினத்தில்  தனக்கு மேல் ஒரு நாயகன் இல்லாத ஏக நாயக வடிவம் விநாயகர் (அநாயகைக நாயகம்) என்கிறார்.கணேஷ பஞ்சரத்தினத்தில் உள்ள இந்த ஒரு பாட்டை சொன்னால் போதும்.

பிள்ளையாரின் பரிபூரண ஆசி கிடைக்கும்.

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்

கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்

அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்

நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம்.

30. கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்

ஒற்றைத் தந்தம் கொண்டவனும், உயர் ஞானம் தருபவனும், கற்றைச் சடையான் செல்வனும், கரிமுகம் கொண்டவனும், கருணை வடிவமானவனுமான கணபதிக்கு எண்ணற்ற வடிவங்கள் இயற்றப்பட்டுள்ளன. எந்த வடிவத்திலும் அவன் இருப்பான். ஆனால், அதில் பிரதானமாக 32 வடிவங்களைச் சிலர் சொல்கின்றனர். 16 வடிவங்களையும் சிலர் சொல்லுகின்றனர். மூலாதார மூர்த்தியின் 16 வடிவங்களைத் தரிசிப்பதும், துதிப்பதும் வாழ்வில் வரும் எந்தத் தொல்லையையும் துரத்தி விடும்.

கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!

சிற்பர மோனத் தேவன் வாழ்க!

வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!

ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!

படைப்புக் கிறையவன் பண்ணவர் நாயகன்

இந்திர குரு எனது இதயத் தொளிர்வான்

சந்திர மவுலித் தலைவன் மைந்தன்

கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்.

இப்படி விநாயகர் குறித்து ஏராளமான முத்துக்கள் உண்டு. அந்த முத்துக்களில் முப்பதை, மாலையாக்கி உங்களுக்குத் தந்திருக்கிறோம்.

நல்வாக்கு நாயகர் ஜோதிடர் எஸ். கோகுலாச்சாரி

Related Stories: