லாஸ்ஏஞ்சல்ஸ்: கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘நாயகன்’ படத்திற்கு பிறகு 38 வருடங்கள் கழித்து இருவரும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தில் சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அடுத்ததாக ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவு (அன்பு – அறிவு) இயக்குனர்களாக அறிமுகமாகும் ‘கேஹெச் 237’ (தற்காலிக தலைப்பு) படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார்.
‘விக்ரம்’ படத்தில் அன்பறிவு சண்டை இயக்குனர்களாக பணியாற்றியதுபோது கமலிடன் அவர்கள் ஒரு கதையை சொல்லியுள்ளனர். இந்த கதை கமலுக்கு பிடித்துப்போக, நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். ‘கேஹெச் 237’ படத்தில் ஏஐ தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுவதாக சொல்லப்படுகிறது. அதற்காக ஏஐ தொழில்நுட்பம் குறித்து கற்றுக்கொள்ள கமல்ஹாசன் அமெரிக்கா சென்று அங்குள்ள பெர்ப்லெக்சிட்டி ஏஐ நிறுவனத்தின் செயலதிகாரியான அரவிந்த் ஸ்ரீநிவாசனைச் சந்தித்தார்.
முன்னதாக அமெரிக்காவில் 45 நாட்கள் கொண்ட ஏஐ பற்றிய கோர்ஸ் ஒன்றை முடித்தார் கமல். தற்போது படத்தின் பணிகளுக்காக அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் மற்றும் அன்பறிவு அதன் புகைப்படத்தை வெளியிட்டு அதில் ‘அனுபவத்தை ஆராயுங்கள்’ என்று கேப்ஷன் போட்டுள்ளனர். இதன்மூலம், ‘கேஹெச் 237’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என தெரிகிறது.
