சென்னை: நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் தியாகராஜனின் மகனும், பிரபல நடிகருமான பிரஷாந்துக்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி அவரது ரசிகர்கள் பிரமாண்டமான முறையில் விழா நடத்தி கேக் வெட்டினர். கொண்டாட்டத்தின் போது நிருபர்களை சந்தித்த தியாகராஜன், பிரஷாந்த், இயக்குனர் ஹரி ஆகியோர், தங்கள் கூட்டணியில் உருவாகும் படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டனர். அப்போது பிரஷாந்த் பேசியதாவது:
சரண் இயக்கத்தில் ‘பார்த்தேன் ரசித்தேன்’ என்ற படத்தில் நான் நடித்தபோது, அதில் உதவியாளராக பணியாற்றிய ஹரி பழக்கமானார். அப்போது அவர் சொன்ன ஒரு கதையை டெவலப் செய்து, கடந்த 2002ல் ‘தமிழ்’ என்ற படத்தை இயக்கினார். அவரது முதல் படத்தில் நானும், சிம்ரனும் ஜோடியாக நடித்தோம். மிகப்பெரிய வெற்றிபெற்ற இப்படத்துக்கு பிறகு மீண்டும் நாங்கள் இணையும் படம் உருவாகி றது. இது நான் நடிக்கும் 55வது படமாகும்.
எனது தந்தை தியாகராஜன் எனக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு இது. நானும், ஹரியும் 23 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்துள்ளோம். அதாவது ஹரியும், நானும் பேசிப் பழகிய 25வது வருட நிறைவில் எங்கள் புதிய படத்தை உருவாக்குகிறோம். தியாகராஜனின் ஸ்டார் மூவிஸ் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது. பேமிலி சென்டிமெண்ட், காமெடி, லவ், ஆக்ஷன் ஆகிய அம்சங்களுடன் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படம் உருவாகிறது.