ஒரு நாள் இரவில் நடக்கும் கதை என்பதால், சிக்கல் இல்லாத திரைக்கதை மற்றும் சீரான காட்சிகளுடன், விக்ரம் ரசிகர்களுக்கு முழுநீள ஆக்ஷன் கரம் மசாலாவை பரிமாறி இருக்கிறார், எழுதி இயக்கியுள்ள எஸ்.யு.அருண்குமார். எதிர்பாராத ட்விஸ்ட்டுகளும், பிளாஷ்பேக் காட்சிகளும் விறுவிறுப்பை அதிகரித்துள்ளன. காளி என்ற கேரக்டரில் விக்ரம் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார். ஆக்ஷன், சென்டிமெண்ட், காதல், விசுவாசம் என்று எல்லா ரூட்டுகளையும் கிளியர் செய்து, மின்னல் வேகத்தில் எதிரிகளை பொளந்து கட்டுகிறார். அவருக்கும், துஷாரா விஜயனுக்குமான குடும்ப ஊடல், கூடல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. விக்ரமின் ஆக்ஷன் அவதாரம், அவருக்கு மிகச்சிறந்த ‘கம்பேக்’ ஆக அமைந்திருக்கிறது. மிடில்கிளாஸ் மனைவியை கண்முன் நிறுத்தும் துஷாரா விஜயன், நடிப்பில் கூடுதல் மார்க் வாங்குகிறார்.
பிருத்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு, மாலா பார்வதி ஆகியோர், தங்கள் பேமிலியின் பதற்றத்தை சீராக கடத்தியுள்ளனர். அலட்டல் இல்லாத, ஆர்ப்பாட்டம் செய்யாத எஸ்.பி எஸ்.ஜே.சூர்யா, விக்ரமுக்கு ஈடுகொடுத்து நடித்துள்ளார். அவரது என்கவுண்டர் பிளான் பலே. ஸ்ரீஜா ரவி மற்றும் இதர நடிகர்கள் இயல்பாக நடித்துள்ளனர். படத்தின் இன்னொரு ஹீரோ, ஜி.வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசை. பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகி விட்டன. இரவு நேரத்தில் நடக்கும் பரபரப்பான காட்சிகளை, அதன் இயல்புத்தன்மை கெடாமல் அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார் தேனி ஈஸ்வர். பிரசன்னா ஜி.கேவின் படத்தொகுப்பு சிறப்பு. கலை இயக்குனர், ஸ்டண்ட் இயக்குனர் ஆகியோரின் பணிகளும் பாராட்டத்தக்கது. 2வது பாகத்தை முதலில் வெளியிட்ட எஸ்.யு.அருண்குமார், முதல் பாகத்தில் என்ன நடந்திருக்கும் என்ற ஆவலை தூண்டியதிலேயே வெற்றிபெற்று விட்டார்.