திருமங்கலம் அருகே வாகைகுளத்தில் அய்யனார் கோயில் சிலை எடுப்பு திருவிழா

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள வாகைகுளத்தில் அய்யனார், கருப்பசாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி பொங்கல் விழாவில் சிலைஎடுப்பு திருவிழா சிறப்பாக நடைபெறும். இதற்காக வாகைகுளம் கண்மாயில் மண் எடுத்து பிரத்யேகமான சிலைகள் இங்கு தயாரிக்கப்படும். பக்தர்கள் தங்களது நேர்த்திகடனாக பஸ், லாரி, டிராக்டர், ராணுவவீரர், போலீஸ்காரர், ஆசிரியர், மாடு, ஆடு உள்ளிட்ட பல்வேறு சிலைகளை செய்து அய்யனார் கோயிலுக்கு எடுத்துசெல்வர். இந்தாண்டு பொங்கல் விழா கடந்த 8ம் தேதி துவங்கியது. முளைப்பாரி, அக்கினிசட்டி, மாவிலக்கு எடுத்து பக்தர்கள் வழிபட்டனர். நேற்று முன்தினம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிலைஎடுப்பு திருவிழா நடந்தது.

இதனையொட்டி திருமங்கலம், மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். தங்களது நேர்த்திகடனாக செய்த சிலைகளை தலைகளில் ஏந்தியபடியே வாகைகுளம் மந்தையில் திரண்டனர். அங்கு கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அரிவாளுடன் ஆடியபடியே பூசாரிகள் முன்னே செல்ல சிலைகளுடன் பக்தர்கள் வரிசையாக பின்னர் சென்றனர். கிராமத்தின் முக்கிய வீதிகளில் வழியில் சென்று அய்யனார் கோயிலுக்கு வயல்வெளிகளில் இறங்கி பக்தர்கள் சென்று அடைந்தனர். அங்கு அய்யனாருக்கு நடந்த சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு சிலைகளை அந்த கோயிலில் வைத்து நேர்த்திகடன்களை நிறைவேற்றினர். திருவிழாவையொட்டி வாகைகுளத்தில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: