கும்மிடிப்பூண்டி, ஏப்.12: கும்மிடிப்பூண்டியில் உள்ள கோயில் குளத்தில் ஆட்டோ கவிழ்ந்ததில் இருவர் படுகாயமடைந்தனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 20 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான முருகன் கோயில் உள்ளது. கோயிலின் அருகே இரண்டு ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோயில் சுற்றுச்சுவர் உடைந்து விழுந்தது. உடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும், என்று கவுன்சிலர் தீபாமுனுசாமி மற்றும் பொதுமக்கள் பலமுறை இந்து அறநிலை துறை அதிகாரிகளுக்கு கோரிக்கைவிடுத்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் ஆத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன்(50) தனது குடும்பத்தினருடன் முருகன் கோயிலுக்கு ஆட்டோவில் வந்தார். அப்போது, கோயில் சுற்றுச்சுவர் உடைந்து கிடப்பதை அறியாமல் சென்றதால் ஆட்டோ 50 அடி பள்ளத்தில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது. இதில், இருவருக்கு காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post கும்மிடிப்பூண்டியில் கோயில் குளத்தில் ஆட்டோ கவிழ்ந்து இருவர் படுகாயம் appeared first on Dinakaran.