சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

 

பூந்தமல்லி, ஏப்.12: பூந்தமல்லி சார் பதிவாளர் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லியில் நீதிமன்றம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பூந்தமல்லியை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பூந்தமல்லியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து நேற்று ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் பூந்தமல்லியில் உள்ள சார் பதிவாளர் அலுவலக அறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் வெடி குண்டுகள் ஏதும் சிக்கவில்லை. வெடிகுண்டு வெடிக்கும் என்ற தகவல் வெறும் புரளி என தெரியவந்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்த சோதனையின் போது சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள், பொதுமக்கள் அந்த வளாகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். திடீரென சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த வெடிகுண்டு சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது. எப்போதும் பரபரப்புடன் காணப்படும் சார்பதிவாளர் அலுவலகம் அருகே நீதிமன்றம், பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம் என பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இந்த பகுதியில் வெடிகுண்டு சோதனை நடத்தியதில் இறுதியில் புறளி என தெரிய வந்தது.

The post சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: