திருத்தணி, ஏப்.9: திருத்தணி திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு, நேற்று நடைபெற்ற அர்ஜூனன் தபசு நிகழ்ச்சியில் குழந்தை வரம் வேண்டி பெண்கள் விரதமிருந்து சாமி தரிசனம் செய்தனர். திருத்தணி காந்தி நகரில் திரவுபதியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், தீமிதி திருவிழா கடந்த மாதம் 27ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் காலை மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. வரும், 13ம்தேதி தீமிதி திருவிழா நடைபெறவுள்ள நிலையில், விழாவின் ஒரு பகுதியாக அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.
இதில், அர்ஜூனன் வேடமிட்ட தெருக்கூத்து கலைஞர், சிவபெருமானிடம் வரம் வேண்டி தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. அப்போது, குழந்தை வரம் வேண்டி பெண்கள், தபசு மரத்தடி மண் தரையில் படுத்து வழிபட்டனர். இதனையடுத்து, அர்ஜூனன் வேடம் தரித்த கட்டைக்கூத்து கலைஞர், சிவபெருமானை நோக்கி பாடல்கள் பாடியவாறு மேலே இருந்து எலுமிச்சை பழங்கள், குங்குமம் விபூதி மற்றும் பூக்கள் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் மீது வீசினார். அதை ஆர்வமுடன் பெண்கள் தங்கள் மடியில் தாங்கியவாறு பெற்றுக்கொண்டனர்.
The post திருத்தணி திரவுபதியம்மன் கோயிலில் அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி appeared first on Dinakaran.