திருத்தணி,ஏப்.3: திருத்தணி வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகத்தில், செயல்பட்டு வரும் ஆதார் சேவை மையங்களில் கவுன்டர்கள் கூடுதலாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஆதார் அட்டை அவசியமானதாக உள்ளது. அதன்படி புதிய ஆதார் அட்டை, ஆதார் அட்டை புதுப்பித்தல், மாற்றம், திருத்தம், புகைப்பட மாற்றம், தேதி மாற்றம், முகவரி மாற்றம், பிழை திருத்தம் போன்ற பல்வேறு பணிகளுக்காக பள்ளி கல்லூரி மாணவ, மானவிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் செயல்படும் ஆதார் சேவை மையத்தை நாடுகின்றனர். திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியங்களில் உள்ள 60 ஊராட்சிகளில் இருந்து சுமார் 1.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் திருத்தணியிலிருந்து சுமார் 50 கி.மீ தூரத்தில் உள்ள திருவாலங்காடு பகுதியிலிருந்து திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம் வரை வர வேண்டி உள்ளது.
இங்குள்ள ஆதார் சேவை மையத்தில் ஒரே ஆதார் கவுன்டர் மட்டுமே செயல்படுகிறது. இருப்பினும் தினமும் 100க்கும் மேற்பட்டோர் காலை 8 மணிக்கே வட்டாட்சியர் அலுவலகம் வந்து டோக்கன் பெற காத்திருக்க வேண்டி உள்ளது. முதல் 40 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு வரிசை முறையில் ஆதார் சேவை வழங்கப்படுவதால் காலதாமதமாக வருபவர்கள் மாலை வரை காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதேபோல் நகராட்சி அலுவலகத்தில் செயல்படும் ஆதார் சேவை மையத்திற்கு தினமும் 80க்கும் மேற்பட்டோர் வருவதால், அனைவரும் ஆதார் சேவை பெற முடியாத நிலை உள்ளது. தாமதமின்றி ஆதார் சேவையை விரிவுப்படுத்தும் வகையில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் ஆதார் கவுன்டர்கள் எண்ணிக்கை உயர்த்தி சேவையை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் கே.ஜி.கண்டிகையில் 5 மாதங்களுக்கு முன்பு ஆதார் சேவை மையம் திறக்கபப்ட்டது. இருப்பினும் பெரும்ளவில் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால், பெரும்பாலானோர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தை நாடுகின்றனர். இதனால் கே.ஜி.கண்டிகை ஆதார் சேவை மையத்தில் தினமும் குறைந்தபட்சமாக 10 முதல் 15 பேர் மட்டுமே பயன்பெறுகின்றனர். பொதுமக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் கே.ஜி.கண்டிகை ஆதார் சேவை மையத்தை திருத்தணி நகரில் அமைத்து அனைவரும் பயன் பெறும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
The post திருத்தணியில் 50 கி.மீ. தூரம் சென்றுஆதார் சேவை பெற கிராம மக்கள் அவதி: கூடுதல் கவுன்டர்கள் திறக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.