ஆவடி அருகே சிப்காட் பகுதியில் 500 கிலோ மைதா மாவை சாலையில் கொட்டி தீவைப்பு: 2 கிமீ தூரத்துக்கு கரும் புகை

 

ஆவடி, ஏப்.10: ஆவடி அருகே திருமுல்லைவாயில் காட்டூர் சிப்காட் பகுதியில் காலாவதியான 500 கிலோ மைதா மாவு மூட்டைகளை சாலையில் கொட்டி, மர்ம நபர்கள் தீ வைத்ததால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு 246 ஏக்கரில் காட்டூர் சிப்காட் தொடங்கப்பட்டது. இங்கு, 777 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த, நிறுவனங்களுக்குத் தேவையான அடிப்படை குடிநீர், சாலை வசதி, மின் விளக்கு, திடக்கழிவு ஆகியவற்றை சிட்கோ நிர்வாகமே பராமரித்து, திடக்கழிவுகளை கொட்டுவதற்காக தனியாக இடம் ஒதுக்கி குப்பைகளை தரம் பிரித்து பராமரித்து வருகிறது.

இந்நிலையில், காட்டூர் சிட்கோ பகுதியையொட்டி வண்டலூரில் இருந்து மீஞ்சூர் செல்லும் வெளிவட்டார சாலை உள்ளது. இச்சாலையையொட்டி, அந்தோணியார் நகர் பகுதியில் காலாவதியான சுமார் 500 கிலோ மைதா மாவு மூட்டைகளை சாலையில் கொட்டி, மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்ததால், சுமார் 2 கிமீ தூரம் வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்டாரச் சாலை முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

இதனால், வாகன ஓட்டிகளுக்கும், அப்பகுதி மக்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடும் சிரமத்திற்குள்ளாகினர். இவ்வாறு, பாதிப்புக்குள்ளான அப்பகுதி மக்கள் இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தும், சம்பவ இடத்திற்கு வராததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

The post ஆவடி அருகே சிப்காட் பகுதியில் 500 கிலோ மைதா மாவை சாலையில் கொட்டி தீவைப்பு: 2 கிமீ தூரத்துக்கு கரும் புகை appeared first on Dinakaran.

Related Stories: