ஆர்.கே.பேட்டை, ஏப்.10: ஆர்.கே.பேட்டை அருகே கோணி தைக்கும் குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த சானூர்மல்லாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகன் சுகுமார் (43). இவர், அதே பகுதியில் சொந்தமாக கோணி தைக்கும் தொழில் செய்து வருகிறார். இந்த குடோனில், 5 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை மேற்கண்ட குடோன் தொழிலாளர்கள் கோணி பைகளை தைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக திடீரென குடோனில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீயை பார்த்ததும் 5 தொழிலாளர்கள் உடனே குடோனில் இருந்து வெளியே ஓடி வந்தனர். தொடர்ந்து, அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், சோளிங்கரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வாகனத்துடன் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு வாகனம் மற்றும் வீரர்கள் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். அதற்குள், 1000க்கும் மேற்பட்ட கோணிப்பைகள் தீயில் கருகியது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, 5 தொழிலாளர்கள் காயமின்றி உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாராணை நடத்தி வருகின்றனர்.
The post கோணி தைக்கும் குடோனில் தீ விபத்து appeared first on Dinakaran.