ஆந்திர மாநில சட்டப்பேரவையில் ரூ.3.32 லட்சம் கோடிக்கு பொது பட்ஜெட் தாக்கல்

திருமலை: ஆந்திர சட்டப்பேரவையில் ரூ.3.32 லட்சம் கோடிக்கான பொதுபட்ஜெட்டை நிதியமைச்சர் பையாவுல கேசவ் நேற்று தாக்கல் செய்தார். ஆந்திர மாநில சட்டப்பேரவையில் 2026-2027ம் ஆண்டுக்கான பொதுபட்ஜெட்டை நிதியமைச்சர் பையாவுலா கேசவ் தாக்கல் செய்தார். முன்னதாக அவர் முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணைமுதல்வர் பவன்கல்யாண் ஆகியோரை சந்தித்தார். பின்னர் சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பேசியதாவது: மாநில பிரிவினை ஒரு இழப்பு என்றால் அதன்பிறகு கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சி மாநிலத்திற்கு பெரிய இழப்புகளை அதிகளவில் ஏற்படுத்தியது. இந்த பட்ஜெட் வெறும் மசோதா மட்டுமல்ல, மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இருக்கும். மாநிலத்தை வளர்ச்சி மற்றும் நலனுடன் நடத்துவதே அரசின் கொள்கை. வரும் நிதியாண்டில் ரூ.3 லட்சத்து 32 ஆயிரத்து 205 கோடி பட்ஜெட் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட் 2047ம் ஆண்டு ஸ்வர்ணாந்திராவை இலக்காக கொண்டு முன்மொழியப்பட்டுள்ளது. ராயலசீமா விவசாயிகளின் கனவுகளை நனவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கிய துறைகளுக்கான ஒதுக்கீடுகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வருவாய் செலவு ரூ.2,56,143 கோடி, மூலதன செலவு ரூ.53,915 கோடி. வருவாய் பற்றாக்குறை ரூ.22,002 கோடி, ரொக்க பற்றாக்குறை ரூ.75,868 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு ரூ.11,745 கோடி, பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,208 கோடி, பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு ரூ.23,650 கோடி, எரிசக்தி துறைக்கு ரூ.19,306 கோடி, பஞ்சாயத்து ராஜிக்கு ரூ.22,941 கோடி, நீர்ப்பாசனத்துறைக்கு ரூ. 18,223 கோடி என முன்மொழியப்பட்டுள்ளன. உணவு உற்பத்தியாளர்களின்w நலனுக்காக ரூ.6,600 கோடி, மீன்வள சேவைக்கு ரூ.600 கோடி, விளை நிலைப்படுத்தலுக்கு ரூ.560 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: