நொய்டா: உத்தரப்பிரதேசத்தில் தனியார் தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றமான சூழல் நிலவியது. உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவின் பேஸ்2 மற்றும் செக்டார் 60ஆகிய பகுதிகளில் ஊதிய உயர்வு கோரி தொழிற்சாலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஊதிய மறுசீரமைப்பு கோரிக்கைளை வலியுறுத்தி அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டக்காரர்கள் தேசிய நெடுஞ்சாலை 9 மறித்து போராட்டம் நடத்தினார்கள். இதில் வன்முறை வெடித்தது. இதில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. மேலும் கற்கள் வீசப்பட்டன. இதன் காரணமாக பதற்றமான சூழல் நிலவியது.
போராட்டக்காரர்கள் போக்குவரத்து இயக்கத்தை முடக்கியதால் காலை நேரத்தில் டெல்லிக்கு செல்லும் பல்வேறு சாலைகளில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர். டெல்லி-நொய்டா எல்லையில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டதை அடுத்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இயல்பு நிலை படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் உறுதி அளித்துள்ளனர்.
