மும்பை: பிரபல திரைப்பட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (92), கடந்த சில மாதங்களாக நுரையீரல் பாதிப்பு, இதயம் தொடர்பான பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார். மும்பை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆஷா போஸ்லே மாரடைப்பால் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். மும்பையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஆஷா போஸ்லே உடலுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, நடிகர் ரன்வீர் சிங், விக்கி கவுசல், எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரே, துணை முதல்வர் சுனேத்ரா பவார் உட்பட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
ஆஷா போஸ்லே உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, தாதரில் உள்ள சிவாஜி பார்க் மயானத்தில் துப்பாக்கி குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ஆஷா போஸ்லேயின் மகன் ஆனந்த் இறுதிச் சடங்கு செய்தார்.
