புதுடெல்லி: “அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நாட்டின் பெரும் ஊழல்வாதி” என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பல வௌிநாட்டு பாஸ்போர்ட்கள் வைத்திருப்பதாகவும், அவருக்கு சொந்தமாக வௌிநாடுகளில் சொத்துகள் இருப்பதாகவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் தள பதிவில், “அசாம் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல்வாதி. சட்டத்தின் பிடியில் இருந்து நிச்சயம் அவரால் தப்ப முடியாது. ஹிமந்த பிஸ்வா சர்மா, தனது அரசியல் எதிரிகளையும், விமர்சகர்களையும் துன்புறுத்துவதற்காக மாநில அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். இத்தகைய அதிகார துஷ்பிரோயம் அரசியலமைப்புக்கு எதிரானது.
எழுப்பப்படும் கேள்விகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். வௌிப்படைத்தன்மை, அதிகாரத்தின் பொறுப்பு கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவையே நமது அரசியலமைப்பு மதிப்புகளின் அடிப்படையாகும். காங்கிரஸ் கட்சி பவன் கேராவுடன் எப்போதும் துணை நிற்கிறது. எதற்காகவும், யாருக்காகவும் அஞ்சி பின்வாங்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.
