மயூரேஷ்வர்: மேற்குவங்கத்தில் குண்டுகளுக்கும், தோட்டாக்களுக்கும் மக்கள் வாக்குகளால் பதிலடி தருவார்கள்” என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார். பிர்பூம் மாவட்டத்தில் உள்ள மயூரேஷ்வர் என்ற இடத்தில் நேற்று நடந்த பாஜ தேர்தல் பிரசார பேரணியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அமித் ஷா, “முதல்வர் மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையாக உள்ள சமூகத்தை பயமுறுத்த முயற்சிக்கிறாரை். தீதி(மம்தா அவர்களே) நாங்கள் இங்கு பல நூற்றாண்டுகளாக வாழ்கிறோம். எங்களை மிரட்ட நீங்கள் யார்?
திரிணாமுல் ஆட்சியில் முர்ஷிதாபாத்தில கலவரங்களும், ராம நவமி ஊர்வலங்கள் மீது தாக்குதல்களும் நடக்கின்றன. சில இடங்களில் சரஸ்வதி பூஜை செய்ய கூட அனுமதிக்கப்படவில்லை. கடந்த 15 ஆண்டுகள் ஆட்சியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், மேற்குவங்கத்தை குண்டுகள், தோட்டாக்களின் களஞ்சியமாக மாற்றி விட்டது. நடக்க உள்ள பேரவை தேர்தலில் குண்டுகளுக்கும், தோட்டாக்களுக்கும் மக்கள் வாக்குகளால் பதிலடி கொடுப்பார்கள்.
தேர்தலில் பாஜ வெற்றி பெற்று மேற்குவங்கத்தில் இரட்டை இன்ஜின் அரசு அமையும். அப்போது மாநிலத்தில் நடக்கும் மாஃபியா ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்படும். தேர்தல் நாளில் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். இல்லையெனில் மே 4ம் தேதிக்கு பிறகு அனைவரும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். மேற்குவங்கத்தில் இருந்தும், மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்தும் ஊடுருவல்காரர்களை வௌியேற்றவே இந்த தேர்தல் நடைபெறுகிறது” என்றார்.
