பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பாடி பில்டர் திலீப் (28) என்ற மாநில அளவிலான பிட்னஸ் டிரைனர், தான் பணியாற்றி வந்த ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய வந்த யோகிதா (42) என்ற திருமணமான பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கத்தை சாதகமாகப் பயன்படுத்தி அந்த பெண், திலீப்பை மிரட்டி பணம் மற்றும் சொத்து கேட்டு கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளிக்கப்பட்டபோது, பெண்ணின் கணவர் முன்னிலையில் சமரசம் செய்யப்பட்டது. இருப்பினும் மிரட்டல் தொடர்ந்ததால் மன உளைச்சலில் இருந்த திலீப், நேற்று முன்தினம் இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திலீப் இறந்த தகவலை யோகிதா இன்ஸ்டாகிராம் மூலம் திலீப்பின் சகோதரிக்கு அனுப்பிய பிறகே இந்த விபரீதம் வெளிச்சத்திற்கு வந்தது. இவ்விவகாரம் தொடர்பாக பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து திலீப்பின் குடும்பத்தினர் கூறுகையில், ‘யோகிதா தொடர்ந்து கொடுத்த மிரட்டல் மற்றும் சொத்து கேட்டு செய்த டார்ச்சர் தான் திலீப்பின் இந்த முடிவுக்கு காரணம்’ என்று குற்றம் சாட்டியுள்ளனர். திலீப்பின் செல்போனை பறிமுதல் செய்துள்ள போலீசார், அதில் உள்ள இன்ஸ்டாகிராம் மெசேஜ்கள் மற்றும் அழைப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
