பாட்னா: நிதிஷ் குமார் இன்று பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். பீகாரின் புதிய முதல்வர் யார் என்ற அறிவிப்பை பாஜ இன்று வௌியிட உள்ளது. பீகார் சட்டப்பேரவைக்கு கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம நடந்த தேர்தலில் பாஜ தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. 243 பேர் கொண்ட பீகார் பேரவையில் 202 உறுப்பினர்களுடன் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. இதில், பாஜ 89 உறுப்பினர்களுடனும், ஐக்கிய ஜனதா தளம் 85 உறுப்பினர்களுடனும் உள்ளன. மேலும் சிறிய கட்சிகள் கூட்டணியில் உள்ளன.
ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக பதவி ஏற்றார். ஆனால் பீகார் அரசியலிலில் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீர் திருப்பம் ஏற்பட்டது. ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக விருப்பம் தெரிவித்து வந்த முதல்வர் நிதிஷ் குமார் பீகாரில் இருந்து மாநிலங்களவைக்கு நடந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ் குமார் கடநத வாரம் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி ஏற்று கொண்டார். இதையடுத்து நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்றும், பேரவையில் பெரும்பான்மையுடன் உள்ள பாஜவை சேர்ந்த ஒருவர் மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் செய்திகள் வௌியாகி வருகின்றன. இதனிடையே, நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் ஐக்கிய ஜனதா தள கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்தார். அவருக்கு பீகார் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் எனவும் தகவல்கள் வௌியாகி வருகின்றன.
இத்தகைய பரபரப்பான சூழலில் பீகார் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்ற பிறகு நிதிஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சையத் அடா ஹஸ்னைனிடம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, பீகாரில் முதன்முறையாக பாஜ முதல்வர் பதவியை பெற உள்ள நிலையில், தனது கட்சியின் மத்திய பார்வையாளராக ஒன்றிய அமைச்சரும், மத்தியபிரதேச முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகானை பாஜ ஆட்சி மன்ற குழு நியமித்துள்ளது. இதையடுத்து இன்று பாட்னா வரவுள்ள சிவ்ராஜ் சிங் சவுகானை பாஜ தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர்.
அதன்பின் பீகாரின் புதிய முதல்வர் யார் என்ற அறிவிப்பு வௌியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக பீகார் அமைச்சரும், அம்மாநில பாஜ முன்னாள் தலைவருமான திலீப் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அடுத்த முதல்வர் யாரென்பதை கட்சியின் மத்திய தலைமை முடிவு செய்யும். அதுவரை எந்த ஊகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. ஆனால் முதல்வர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை” என்றார். பீகார் முதல்வருக்கான போட்டியில் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய், பீகார் அமைச்சர்கள் லாகேந்திர பாஸ்வான் மற்றும் ஸ்ரேயசி சிங் ஆகியோரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
