மேற்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் எதிரொலி: முகவரி சான்று இல்லாமல் 5 கிலோ காஸ் சிலிண்டர் சப்ளை; ஏஜென்சிகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒன்றிய அரசு தற்போது தேசிய குழாய் வழி இயற்கை எரிவாயு இயக்கம் 2.0 மற்றும் சிறிய அளவிலான காஸ் சிலிண்டர்கள் விநியோகத்தை தீவிரப்படுத்தியுள்ளது. ஈரான் மீதான போரால் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், ‘தேசிய குழாய் வழி இயற்கை எரிவாயு இயக்கம் 2.0’ மற்றும் சிறிய அளவிலான காஸ் சிலிண்டர்கள் விநியோகத்தை ஒன்றிய அரசு தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 23ம் தேதி முதல் இன்று வரை 13 லட்சத்திற்கும் அதிகமான 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 77,000 சிலிண்டர்கள் விற்பனையான நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 1,10,000 அலகுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

முன்னதாக கடந்த 6ம் தேதியன்று, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான 5 கிலோ சிலிண்டர்களின் தினசரி ஒதுக்கீட்டை இரண்டு மடங்காக அதிகரிக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. இதன் மூலம் மார்ச் மாதத்தில் அமலில் இருந்த 20 சதவீத உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், முகவரி சான்று இன்றி அடையாள அட்டையை மட்டும் காண்பித்து எண்ணெய் நிறுவனங்கள் மூலம் இந்த சிலிண்டர்களைப் பெற்றுக் கொள்ளலாம். அதேபோல், மார்ச் மாதத்துடன் முடிவடைய இருந்த குழாய் வழி இயற்கை எரிவாயு திட்டமானது வரும் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 3.6 லட்சம் புதிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 4 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.

எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், கள்ளச்சந்தையை ஒழிக்கவும் நாடு முழுவதும் 1.2 லட்சத்திற்கும் அதிகமான சோதனைகள் நடத்தப்பட்டு 57,000 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது 98 சதவீத முன்பதிவுகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகின்றன. காஸ் சிலிண்டர் முன்பதிவு இடைவெளியானது நகர்ப்புறங்களில் 25 நாட்கள் வரையிலும், ஊரகப் பகுதிகளில் 45 நாட்கள் வரையிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று ஐக்கிய அரபு அமீரகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். பெட்ரோலியத் துறை செயலாளர் டாக்டர் நீராஜ் மிட்டல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், துறைமுகங்களில் தேங்கியிருந்த சரக்குகள் 90 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘எரிபொருள் விநியோகம் தற்போது சீராக இருந்தாலும், நீண்டகால திட்டம் அடிப்படையில் குழாய் வழி எரிவாயு முறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்’ என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: