பெங்களூரு: பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசிப்பதற்காக நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர் கார்கே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கார்கே,”பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை காங்கிரஸ் கட்சி முழுமையாக ஆதரித்தாலும் இதன் பரந்த தேசிய அளவிலான தாக்கங்களை கருத்தில் கொண்டு இதனை அமல்படுத்துவது குறித்து விரிவான விவாதங்கள் நடத்தப்பட்ட வேண்டிய அவசியம் உள்ளது.
ஒன்றிய அரசு அனைத்து கட்சிகளையும் அழைத்து விவாதங்களுக்கு அனுமதி அளித்தால் நாங்கள் அதில் பங்கேற்று எங்களது ஆலோசனைகளை வழங்க முடியும். ஆனால் அவர்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு தயாராக இல்லை. அதனால் தான் நாங்கள் மீண்டும் ஒரு முறை, ஏப்ரல் 15ம் தேதி (நாளை) அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தை கூட்டுகிறோம். அந்த கூட்டத்தில் நாங்கள் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அதனை நாங்கள் தெரிவிப்போம். பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை எங்களில் யாரும் எதிர்க்கவில்லை. நாங்கள் ஏற்கனவே இதனை ஆதரித்துள்ளோம். இது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட சட்டமாகும். ஆனால் ஒன்றிய அரசு இதில் இருந்து ஆதாயம் தேடுவதற்கு மட்டுமே முயற்சிக்கிறார்கள்” என்றார்.
