மேலும் உயர வாய்ப்பு; கேரளத்தில் வாக்குப்பதிவு 79.63%: : தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

திருவனந்தபுரம்: கேரளத்தில் இதுவரை வாக்குப்பதிவு செய்தவர்கள் 79.63 சதவீதம் என்றும், சர்வீஸ் வாக்காளர்கள் எண்ணிக்கை வரவேண்டியிருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் கேரள தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர் தெரிவித்தார். கேரளத்தில் கடந்த 9ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இங்கு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 71 லட்சத்து 42 ஆயிரத்து 952 ஆகும். வாக்குப்பதிவு நடந்த தினத்தன்று இரவில் 78.27 சதவீதம் பேர் வாக்களித்ததாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால் வாக்குப்பதிவு முடிந்து 4 நாட்கள் ஆகியும் இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிடாமல் இருந்தது.இது தொடர்பாக கேரள எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினார். இந்லையில் நேற்று கேரள தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியது: வாக்குப்பதிவு தினத்தன்று பூத்துகளில் வந்து ஓட்டு போட்டவர்கள் 78.27 சதவீதம் ஆகும். தபால் ஓட்டுகள், அத்தியாவசிய மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் ராணுவம், துணை ராணுவத்தினரின் (சர்வீஸ் ஓட்டுகள்) எண்ணிக்கை படிப்படியாகத்தான் கிடைக்கும். வீடுகளில் வைத்து ஓட்டு போடும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் ஓட்டுகளும் தபால் ஓட்டுகளாகத் தான் சேர்க்கப்படும். தற்போது சர்வீஸ் ஓட்டுகள் தவிர மற்ற அனைத்து ஓட்டு சதவீதமும் கிடைத்துள்ளது. இதன்படி கேரளத்தில் 79.63 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. சர்வீஸ் ஓட்டுகளையும் சேர்க்கும்போது இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாள் வரை சர்வீஸ் ஓட்டுகளை போடலாம். எனவே வாக்கு எண்ணிக்கை முடியும் போது தான் இறுதி வாக்குப்பதிவு சதவீதம் கிடைக்கும். எல்லா தேர்தல்களிலும் இதுதான் நடைமுறையாகும். வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட எந்த காலதாமதமும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: