தேர்தலில் வாக்களிக்க கைவிரல் & கருவிழி பயோமெட்ரிக் முறை அமல்படுத்த கோரி மனு.!! தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: தேர்தல்களில் வாக்களிக்க கைவிரல் மற்றும் கருவிழி பயோமெட்ரிக் அடையாள முறையை அமல்படுத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க, வாக்குச்சாவடிகளில் பயோமெட்ரிக் அடையாள முறையை அமல்படுத்தக் கோரும் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது. தேர்தல்களின் போது வாக்கு சாவடிகளில் ஆள்மாறாட்ட செய்து வாக்குப்பதிவு நடைபெறுவது, இரட்டை வாக்குப்பதிவு மற்றும் லஞ்சம் போன்ற தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், கைரேகை மற்றும் கருவிழி சார்ந்த பயோமெட்ரிக் அடையாள முறையைச் செயல்படுத்தக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் பதிலளிக்க கூறி இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 32-ஆம் பிரிவின் கீழ் வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்திருந்த இந்த மனுவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்ஜி ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது ஒருசில மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல்களில் இது சார்ந்த உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது. எனினும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும்/அல்லது மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு இத்தகைய ஒரு வழிமுறையைப் பின்பற்றுவது தகுதியானதா என்பதை ஆராய வேண்டும்,” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

எனினும் மனுதாரர் கோரும் மாற்றங்களை செயல்படுத்தினால் தேர்தல்களை நிர்வகிக்கும் விதிகளில் பெரும் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்றும், இது கணிசமான நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார். தான் கோரும் இந்த மாற்றங்கள் தேர்தல் மோசடிக்கு எதிரான ஒரு தடுப்பு முறையாகச் செயல்படும் என்று மனுவை தாக்கல் செய்த உபாத்யாய் தெரிவித்தார். விரைவில் நடைபெற உள்ள மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இத்தகைய நடவடிக்கைகளைச் செயல்படுத்துவது சாத்தியமற்றதாக இருக்கலாம் என்பதை அவர் ஒப்புக்கொண்டார், ஆனால் எதிர்காலத் தேர்தல்களில் இந்த அமைப்பை அறிமுகப்படுத்தலாம் என்று வாதிட்டார்.

எந்த தேர்தல் என்றாலும் வாக்குச்சாவடிகளில் லஞ்சம், முறையற்ற செல்வாக்கு, ஆள்மாறாட்டம், இரட்டை வாக்குப்பதிவு, போலி வாக்குப்பதிவு மற்றும் பிற தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு, ‘விரல் மற்றும் கருவிழி சார்ந்த உயிரியல் அடையாள முறையை’ (Biometric Identification System) அமல்படுத்தக் கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் வாதிட்டார். மேற்கண்ட முறைகேடுகளை தடுக்க இந்தியத் தேர்தல் ஆணையம் பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் மேற்சொன்னதை போன்ற முறைகேடு நிகழ்வுகள் தொடர்ந்து நீடித்து வருவதாகவும், இதன் மூலம் தேர்தல் செயல்முறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைந்து வருவதாகவும் மனுதாரர் வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: