சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு; தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினருக்கு ஜாமீன்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் அனைவரும் ஜெயிலில் இருந்து விடுவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் போலீஸ் சிறப்பு புலனாய்வுக் குழு உரிய நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களில் கடைசி நபருக்கும் நேற்று ஜாமீன் கிடைத்தது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் திருடப்பட்ட சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு 2 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தியது.

கேரள குற்றப்பிரிவு ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் இந்த விசாரணை நடைபெற்றது. இந்த வழக்குகளில் உண்ணிகிருஷ்ணன் போத்தி, சபரிமலை மூத்த தந்திரி கண்டரர் ராஜீவரர், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் தலைவர்களான பத்மகுமார், வாசு, முன்னாள் உறுப்பினர்கள் விஜயகுமார், சங்கரதாஸ், சென்னை அம்பத்தூர் தனியார் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ் பண்டாரி, கர்நாடக மாநிலம் பெல்லாரி நகைக்கடை அதிபர் கோவர்தன் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆனால் சிறப்பு புலனாய்வுக் குழுவால் இவர்கள் மீது 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை.இதனால் படிப்படியாக ஒவ்வொருவருக்கும் ஜாமீன் கிடைக்க தொடங்கியது. நேற்று வரை தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் சங்கரதாஸ் மட்டுமே சிறையில் இருந்தார். கடந்த ஜனவரி 14ம் தேதி இவர் கைது செய்யப்பட்டார். கைதாகி 90 நாட்களாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் நேற்று கொல்லம் விஜிலன்ஸ் நீதிமன்றம் சங்கரதாசுக்கு ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 12 பேருக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது.

Related Stories: