ரஜோரி: “ஜம்மு காஷ்மீர் எல்லையில் எதிரிகளின் எந்த விரோத செயல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” என ராணுவ அதிகாரி எச்சரித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் கடந்த 1947-48ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி எல்லை தாண்டி ஊடுருவிய பாகிஸ்தானிடம் இருந்து ரஜோரி மாவட்டத்தை இந்திய ராணுவம் மீட்டெடுத்தது. இதில் ஏராளமான ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை போற்றி, நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 13ம் தேதி ரஜோரி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் தியாகிகளை கவுரவித்தல், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் ராணுவ அணிவகுப்புகள் நடைபெறும்.
அந்த வகையில் நேற்று ரஜோரியில் நடந்த விழாவில் மேஜர் ஜெனரல் கவுசிக், “நமது இந்திய ராணுவம் எல்லை பகுதிகளில் முழு எச்சரிக்கையுடன் இருக்கின்றன. எல்லையில் எதிரிகளின் ஒவ்வொரு விரோத செயல்களுக்கும் தக்க பதிலடி கொடுக்க ராணுவ வீரர்கள் தயாராக உள்ளனர். எல்லைகளை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுடன் உள்ளூர் மக்களும் தோளுடன் தோள் சேர்ந்து ஒத்துழைப்பது பாராட்டுக்குரியது ” என்று தெரிவித்தார்.
