ஆறுபடை வீடுகளின் அற்புதம் அறிவோமா?

தமிழ் கடவுள் முருகனுக்கு ஆறுபடை வீடுகள் உள்ளன. அவற்றைப் பற்றி பார்ப்போமா?

முதல்படை வீடு - திருப்பரங்குன்றம் : முதல்படை வீடானது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகும். சூரபத்மனை போரில் வென்ற முருகனுக்கு, இந்திரன் தன் மகள் தெய்வானையை மணம் செய்து வைக்கிறார். இந்த மணக்கோலத்தில் முருகன் திருப்பரங்குன்றத்தில் காட்சியளிக்கிறார்.

இரண்டாம் படைவீடு - திருச்செந்தூர்: இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் ஆகும். கடலோரத்தில் இத்தலம் அமைந்துள்ளதால் திருச்சீலைவாய், ஜயந்திபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. முருகன், சூரனை சம்ஹாரம் செய்த இடமென அறியப்படும், இத்தலம் குரு ஸ்தலமாகவும் விளங்குகிறது.

மூன்றாம் படைவீடு - பழநி: மூன்றாம் படை வீடு பழநி ஆகும். இங்குள்ள முருகன் சிலை போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. எனவேதான், இந்த சிலை மீது அபிஷேகம் செய்த நீரை பருகினால் நோய்கள் நீங்குமென கூறப்படுகிறது. ஞானப்பழம் கிடைக்காததால், சகோதரர் விநாயகருடன் கோபம் கொண்டு அமர்ந்த குன்று என்பதால் பழம் + நீ என்பது பழநி ஆனது.

நான்காம் படைவீடு - சுவாமிமலை: நான்காம் படை வீடு சுவாமிமலை ஆகும். பிள்ளை முருகனை குருவாக ஏற்றுக் கொண்டு, தன்னை சிஷ்யனாக தந்தையான சிவன் கருதிக் கொண்ட தலமிது. அறிவிற் சிறந்த கருத்தை சிறியோர் கூறினாலும், பெரியோர் ஏற்க வேண்டுமென்பதை உலகுக்கு உணர்த்தும் தலமிது. எனவேதான், இங்குள்ள முருகன் சிவ குரு நாதன் என போற்றப்படுகிறார்.

ஐந்தாவது படைவீடு - திருத்தணி: ஐந்தாம் படை வீடு திருத்தணி ஆகும். சூரனை வதம் செய்ததால் உக்கிரத்தில் இருந்த முருகன், தனது கோபத்தை தணித்துக் கொண்ட தலம் என்பதால் திருத்தணி என பெயர் பெற்றது. வேடர் குல மாணிக்கமாய் வள்ளியை, முருகன் மணம் புரிந்த தலமாகவும் சொல்லப்படுகிறது.

ஆறாவது படைவீடு - பழமுதிர்ச்சோலை: ஆறாம் படை வீடு பழமுதிர்சோலையாகும். ஒளவையாரிடம், ‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா’ என முருகன் கேட்ட தலமிது. ஒளவைக்கு பழம் உதிர்த்த சோலை வனம் என்பதையே பழமுதிர்ச்சோலை எனப்பது. அழகர்மலை உச்சியில் இக்கோயில் அமைந்துள்ளது.

பால தண்டாயுதபாணிக்கு பதினாறு வகை தீபாராதனை

பழநி முருகன் கோயிலில் உள்ள சிறப்பு பூஜைகளின் போது முருகனுக்கு 16 வகை தீபாராதனைகள் நடைபெறுகின்றன. அவை 1) அலங்கார தீபம், 2) ஐந்து முக தீபம், 3) நட்சத்திர தீபம், 4) கைலாச தீபம், 5) பாம்பு வடிவ தீபம், 6) மயில் தீபம், 7) சேவல் தீபம், 8) யானை தீபம், 9) ஆடு வடிவ தீபம், 10) புருஷாமிருக தீபம், 11) பூரண கும்ப தீபம், 12) நான்கு முக தீபம், 13) மூன்று முக தீபம், 14) இரண்டு முக தீபம், 15) ஈசான தீபம், 16) கற்பூர தீபம் என்பனவாகும்.

ரோப்கார், வின்ச் வசதி

பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்கு யானைப்பாதை மற்றும் படிப்பாதை என 2 வழித்தடங்கள் உள்ளன. தவிர, தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப்கார், மேற்கு கிரிவீதியில் இருந்து 3 வின்ச்கள் இயக்கப்படுகின்றன. புதிதாக ரூ.73 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் 2வது ரோப்கார் அமைக்கும் பணியும் நடந்து வருகின்றன.

Related Stories: