பரந்தாமனே செயலாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீகிருஷ்ண அமுதம் - 37

(பகவத் கீதை உரை கர்ம யோகம்)

பிரபு சங்கர்

கர்மம் செய்யவே கடமைப்பட்ட வனாக இரு’ என்று கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு அறிவுறுத்துகிறார். மனிதனாகப் பிறப்பெடுத்ததே அப்படி கர்மவினை ஆற்றுவதற்காகத்தான், அதிலிருந்து பிறழக்

கூடாது, அதுதான் நம் முன்னோர்கள் அனைவரும் இயற்றிவந்தது. அந்தப் பாரம்பரியத்திலிருந்து முரண்படக் கூடாது என்கிறார் அவர்.

யத்யதாசரதி ச்ரேஷ்டஸ்தத்ததேவேதரோஜன

ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததனுவர்ததே (3:21)

‘‘மேலான மக்கள் செய்வதையே மற்றவர்களும் பின்பற்றுகிறார்கள், தொடர்ந்து செய்கிறார்கள். அவர்களுடைய செயல்முறைகளையே விதிகளாக மேற்கொண்டு, அவர்களையே வழிகாட்டிகளாக, முன்மாதிரியாகக் கொண்டு மற்றவர்கள் அவற்றைத் தாமும் மேற்கொள்கிறார்கள்.’’

முன் ஏர் போகும் வழியிலேயே பின் ஏர் போகும் என்பது விவசாயப் பழமொழி. முன்னால் ஏர் பிடித்துச் செல்பவர் செல்லும் அதே பாதையில், பின்னால் ஏர் ஓட்டி வருபவரும் செல்வார். இது, நிலத்தை ஆழ உழுவதற்கான ஒரு வழி. அதாவது பூமியைப் பண்படுத்தும் பாங்கு. காட்டுப் பகுதியில் ஒற்றையடிப் பாதை உருவானதும் இப்படித்தான். முதலில் அந்தப் பகுதிக்குள் நடந்து செல்லும் ஒருவர், அந்தப் பாதையை தனக்குப் பாதுகாப்பானதாகத் தேர்வு செய்கிறார். வனத்தில் வாழக்கூடிய மிருகங்களின் தாக்குதலுக்கு உட்பட்டுவிடாதவகையில், அந்தப் பாதையின் திசையை அவர் தீர்மானித்து அந்த வழியில் நடக்கிறார்.

அவர் தினமும் அந்தப் பாதை வழி யாகச் செல்ல வேண்டியவராகவும் இருந்திருப்பார். அதனாலேயே அவர் செல்லும் அந்தப் பாதையில் புல், பூண்டு, செடி எதுவும் முளைக்காமல், அவருக்கு வழிவிடுகின்றன. இதற்கு முக்கிய காரணம், தான் அவ்வாறு உருவாக்கும் அந்தப் பாதை, தனக்காக மட்டு மல்லாமல், அந்த வனத்திற்குள் வரக்கூடிய பிற அனைவரும் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம் என்ற அவரது பரோபகார சிந்தனைதான். அழகிய பெண்ணின் வகிடெடுத்த தலைபோல அந்தப் பாதை அமையும்போது அதற்கு மூலகாரணமானவரும், அவரைத் தொடர்ந்து அதைப் பயன்படுத்தும் மற்றவர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றனர்.

ஆனால் துரதிருஷ்டவசமாக, இப்போது பலரும், முந்தையவர் எதற்காக ஒரு செயலைச் செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளாமலேயே கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறார்கள். உதாரணமாக கோயிலில், முன்னால் போகும் ஒருவர் பலிபீடத்தைத் தொட்டுத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டார் என்றால், அவரைப் பார்க்கும், அவருக்குப் பின்னால் வருபவர்களும், அதற்கு முன்னர் தாம் அப்படிச் செய்திராவிட்டாலும், தாமும் பலிபீடத்தைத் தொட்டுத் தம் கண்களில் ஒற்றிக்கொள்கிறார்கள்.

இது மூடத்தனமான பின்பற்றுதல். முதலில் இச்செயலைச் செய்தவர் எதற்காக அப்படித் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டார் என்று கேட்காமல், தெரிந்து கொள்ளாமல், அப்படியே தொடர்வது அப்பாவித்தனமா, அறியாமையா? ஒரு குரு தினமும் யாகம் வளர்க்கும் கர்மாவினை ஆற்றிவந்தார். யாகப் பொருட்களை எலிகள் நாசம் செய்யவே, அவற்றைக் கட்டுப்படுத்த ஒரு பூனையை அவர் வளர்த்தார்.

பூனையின் வருகையால் எலிகளின் நடமாட்டம் குறைந்தது, ஒரு கட்டத்தில் முற்றிலும் இல்லாமலேயே போனது. இதைக் கண்டு குரு மகிழ்ந்தாலும், பூனையால் வேறு தொல்லைகள் வர ஆரம்பித்தன. ஆமாம், அந்தப் பூனை ஓரிடத்தில் அமர்ந்திருக்காமல் அங்கும், இங்குமாகத் தாவித் தாவிச் சென்று குருவிற்குப் பல இடையூறுகளை தந்தது. நெய்க்கிண்ணத்தைத் தட்டிவிட்டது, அடுக்கி வைக்கப்பட்ட சமித்துகளை சரித்தது. ஒருசமயம், யாகத்தீயிலேயே விழப்பார்த்தது!

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை காட்ட இயலாத குரு, பொதுவாக அதை அதன் விருப்பத்துக்கு ஓடியாட அனுமதித்தாலும், யாகம் நடத்தும் சமயத்தில் மட்டும், தரையில் ஒரு கழியை நட்டு, அதில் அந்தப் பூனையைக் கட்டி வைத்தார். அவருக்கு அத்யந்த சீடன் என்று யாரும் இல்லாவிட்டாலும், யாகம் நடக்கும் சமயத்தில் மட்டும் ஒரு இளைஞன் அவருக்கு உதவ வருவான். அவரைப் போலவே தானும் யாகக் கர்மானுஷ்டானங்களை மேற்கொள்ளவேண்டும் என்று அவன் பெரிதும் விரும்பினான். குருவை நெருக்கமாக கவனிக்க ஆரம்பித்தான். அவர் யாகம் தொடங்கும் முன் பூனையைக் கட்டி வைப்பதைப் பார்த்து வைத்துக் கொண்டான்.

பின்னாளில், குரு ஏதோ காரணமாக வேறு ஊருக்குப் போயிருந்தபோது சீடனிடம், ``தினமும் தான் இயற்றுவதுபோன்று யாகம் செய்’’ என்று அவனிடம் அறிவுறுத்திவிட்டுப் போனார். அதன்படி சீடனும், குருவிடமிருந்து கற்றிருந்த மந்திரங்களை உச்சரித்து யாகம் செய்யத் தீர்மானித்தான். எல்லாவற்றையும்விட அவன் முதன்முதலாகச் செய்த காரியம் என்ன தெரியுமா? ஒரு பூனையைத் தேடிக் கண்டு பிடித்துக் கொண்டுவந்து ஒரு கழிநட்டு அதை அதில் கட்டி வைத்ததுதான்! எதற்காகப் பூனையைக் கட்டி வைத்திருக்கிறீர்கள் என்று சீடனும் குருவைக் கேட்கவில்லை; குருவும் அவனுக்கு அந்தக் காரணத்தை விளக்கவில்லை!

இப்படித்தான் இன்று பலரும் காரண, காரியம் புரியாமல் பின்பற்றுவதை செய்கிறோம். இதற்கு இடம் கொடுக்காமல், முன்மாதிரியாக இருப்பவர் தன் கர்மத்துக்கான காரணங்களைத் தெளிவுபடுத்திவிட வேண்டும். அதுதான் அத்தகைய ரோல் மாடல்களுக்கான சரியான இலக்கணம். கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது உணர்ச்சிவசப்பட்ட மனோபாவத்தின் விளைவு. அதனால் பின்விளைவுகள் மோசமானதாகவும், நஷ்டமளிக்கக் கூடியதாகவும் அல்லது குறைந்த பட்சம் நம் அறியாமையை வெளிப்படுத்தி அவமானப்படுவதாகவும் அமையும்.

அதேபோல ஒருவரைப் பின்பற்றுபவர், தன் முன்மாதிரியானவரின் உள்ளத்தைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவருடைய செய்கையின் உள்ளர்த்தம், அதற்கான காரணம், அதனால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள், தானும் அவரைப் பின்பற்றுவதால் தன்னையும் பிறர் பின்பற்றுவார்களே என்ற பொறுப்புணர்ச்சி எல்லாம் கொண்டவராக இருத்தல் வேண்டும். அதுதான் ஒரு தொண்டனுக்கு அழகு. அப்படிப்பட்ட தொண்டனைப் பெறுவதுதான் தலைவனுக்கும் அழகு!

 

ஒரு விஷயத்தைப் பார்த்து அதை அப்படியே தானும் செய்வது ஒரு குழந்தையின் இயல்பு. அதாவது தன்னாலும் இன்னொருவரைப் போலச் செய்ய முடியும் என்று காண்பித்துக் கொள்வதாகிய முயற்சி அது. அதாவது காப்பி அடிப்பது! தேர்வு அரங்கில், ஒழுங்காகத் தயார் செய்துகொண்டு வராத ஒரு மாணவன், நன்கு விடையெழுதக்கூடிய இன்னொருவனைப் பார்த்து காப்பியடிப்பதும் இத்தகையதே. ஆனால், இது காப்பியடிப்பவனுடைய பலவீனம் சார்ந்த விஷயம். தகுதியில்லாவிட்டாலும் எப்படியாவது தானும் உயரே வந்துவிடவேண்டும் என்ற பேராசை!

ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சன

நானவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி (3:22)

‘‘அர்ஜுனா, என்னைப் பொறுத்தவரை இந்த மூவுலகிலும் எந்தக் கடமையும் எனக்குக் கிடையாது. நான் அடைய வேண்டியது என்று எதுவுமே இல்லை. ஆனாலும், நான் கர்மங்களைச் செய்துகொண்டுதான் இருக்கிறேன்.’’

பகவான் கிருஷ்ணன் எல்லாவற்றையும் அடைந்தவர், அதேசமயம் எல்லாவற்றையும் கடந்தவர். மூவுலகு மட்டுமல்ல, ஈரேழுலகிலும் வியாபித்திருப்பவர் அவர். எல்லாமும் தானேயாகிவிட்டாலும், தானே எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருந்தாலும், அவர் இன்னமும் தொடர்ந்து கர்மங்களை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறார். அதாவது அது, தன் சுயதேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக அல்ல, பிறருக்கு நன்மை உண்டாக, பொதுவாக தர்மம் நிலைத்து நிற்க.

அதனால்தான் தன் பராக்கிரமத்தையும், பெருமதிப்பையும், ஒப்பிட ஒண்ணா அரிய தகுதியைப் பெற்றிருந்தாலும், அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு அவர் அர்ஜுனனுக்கு தேரோட்டியாகக் கடமையை நிறைவேற்றுகிறார். அவரிடத்தில் ஈகோ இல்லாதது ஆச்சரியமான விஷயம். தான் ஈகோ பார்த்து ஒதுங்கிவிட்டால், இந்தப் போர் நிகழவேண்டிய கட்டாயப் பொறுப்பிலிருந்து பிற அனைவரும்கூட ஒதுங்கிவிடுவார்கள். ஆளாளுக்கு ஏதேனும் சாக்கு சொல்லி, தம் கடமையைப் புறக்கணித்துவிடுவார்கள். வெறும் கூக்குரலும் அதன் ஓசையும்தான் நிறைந்திருக்குமே தவிர, செயல் எதுவும் ஈடேறாது.

அதர்மம் அழியவேண்டும் என்பதுதான் பிரதான குறிக்கோள். அதர்மத்தைக் கையிலெடுத்தவன் யாராக இருந்தாலும் அவன் அழிய வேண்டும் என்ற ஒருமுகப்படுத்தப்பட்ட எண்ணம்தான் அந்தக் குறிக்கோள் நிறைவேற ஒரே வழி. அதற்கு போர் என்பது ஓர் உத்தி. ஆகவே அநாவசிய தயக்கங்களும், ஏதேனும் சலுகை கிடைக்காதா இந்தக் கர்மத்திலிருந்து விடுபட்டுவிட மாட்டோமா என்ற எதிர்பார்ப்புகளும் மனதை அலைக்கழிக்க விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணன் அறிவுறுத்துகிறார்.

தன் ஒருவனால் வெகு எளிதாக கௌரவர்களை வதைத்து பாண்டவர்களுக்கான தர்மத்தை நிலைநாட்டிவிட அவரால் முடியாதா என்ன? ஆனாலும், அது பாண்டவர்களுக்கு இழுக்கு. தான் பட்ட நஷ்டத்துக்கு, தான் அனுபவித்த அவமானத்துக்கு, தானே போராடாமல் வேறு யாராவது போரிட்டு அந்த நஷ்டத்தை நிவர்த்தி செய்வதோ, அந்த அவமானத்துக்குப் பழிவாங்குவதோ செய்தால், அப்படி நஷ்டமும், அவமானமும் பட்டவரை யாராவது மதிப்பார்களா?

அசோகவனத்தில் சீதை ராமனைப் பிரிந்ததால் மிகவும் துயருற்று வருந்திக்கொண்டிருந்தாள். அப்போது அவள்முன் ஆஞ்சநேயர் வந்து நின்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தான் ராமதூதன் என்பதை, சீதை சம்பந்தப்பட்ட பல சாட்சியங்களால் நிரூபித்தான். அதைக் கேட்டு சீதை பெரிதும் மகிழ்ந்தாள். அப்போதே அவள் ராவணனுடைய கொடுஞ்சிறையிலிருந்து விடுபட்டுவிட்ட சுதந்திர உணர்வைப் பெற்றாள்.

ஆனால், அடுத்து ஆஞ்சநேயர் விடுத்த கோரிக்கையைக் கேட்டபின் பெரிதும் வெகுண்டாள். ஆமாம், ‘‘தாயே, தாங்கள் சம்மதித்தீர்களென்றால், தங்களை என் தோள்மீது அமர்த்தி, இதோ இந்த நொடியிலேயே இங்கிருந்து சிறைமீட்டு ஸ்ரீராமபிரான் முன் கொண்டு நிறுத்தி அவரைப் பெரிதும் மகிழ்ச்சிக்குள்ளாக்குவேன்,’’ என்று அவன் கூறியதைக் கேட்டதும் அவளுக்கு உடலே பதறியது.

‘‘ஆஞ்சநேயா, நீ வானரன்தான் என்றாலும், உன்னை ஸ்பரிசித்து நான் சிறை மீண்டு வருவேன் என்று எப்படி எதிர்பார்த்தாய்?  உனக்குத்தான் எத்தனை ஆணவம்? அதுமட்டுமா, உன்னுடைய இந்தச் செய்கையால் எனக்கும், ஸ்ரீராமனுக்கும்தான் எத்தனை பரிகாசம் கிட்டும்! ஏன், என்னைச் சிறைபிடித்த ராவணனே கைகொட்டிச் சிரிப்பானே! ‘கேவலம் ஒரு குரங்கைப் பற்றிக் கொண்டு விடுதலை பெற்றுச் சென்றாளே இந்த சீதை.

இவளுடைய கணவன் என்ன அவ்வளவு கையாலாகாதவனா? அல்லது என் பராக்கிரமத்துக்கு முன்னால் தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று பயப்படக்கூடியவனா?’ என்றெல்லாம் கேலி பேசி கொக்கரிப்பானே! அவனையடுத்து உலகோர் எல்லோரும் ராமனை எள்ளி நகையாடுவார்களே! மனைவியைப் பறிகொடுத்ததே கேவலம், அந்த மனைவியைத் தான் வீரத்துடன் போய் மீட்கத் துணிவில்லாமல் அற்பமான ஒரு குரங்கிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்தானே! ‘எடுத்தது காணுமுன் இற்றது கேட்ட’ அபார சக்தியுடன் வில்லை முறித்தவன் இவன்தானா? தாடகையைக் கொன்றவனும் இவன்தானா?

விஸ்வாமித்திரரின் யாகத்தைக் கெடுத்த அரக்கர்களை அலற அலற வதம் செய்தவன் இவன்தானா என்றெல்லாம் சந்தேகப்படுவார் களே! இந்த ஒரு சின்ன சறுக்கலால் முந்தைய சாதனைகள் எல்லாம் கேலிப்பேச்சாகிவிடுமே! இது உனக்கு உகந்ததுதானா?’’ என்றெல்லாம் கேட்டு ஆஞ்சநேயனின் கோரிக்கை தனக்கு எத்தனை அவமானகரமானது என்று உணர்த்தினாள் சீதை. அதுமட்டுமல்ல, ராமனின் எந்த முயற்சியுமில்லாமல் ஆஞ்சநேயரால் சீதை மீட்கப்பட்டாள் என்றால், உலகோர் அவனை ‘சீதையின் கணவன்’ என்றுதான் விமரிசிப்பார்களே அல்லாது, தன்னை ‘ராமனின் மனைவி’ என்று வியந்து பாராட்டுவார்களா என்ற யதார்த்தத்தையும் ஆஞ்சநேயருக்குப் புரியவைத்தாள் சீதை.

ஆக, அவரவர் தத்தமது கர்மாக்களை செவ்வனே நிறைவேற்றிவந்தாலே போதும், விளைவுகள் எல்லாம் நன்மையாகவே முடியும். இந்த காலகட்டத்தில், தான் ஒரு தேரோட்டி யாகப் பணியாற்றவேண்டியது, தான் இயற்றவேண்டிய கர்மா என்பதை கிருஷ்ணன் புரிந்துகொண்டு அதன்படியே செயல்பட்டும் வருகிறார். பரந்தாமனே, அனைத்துலகுக்கும் முதல்வனே, இப்படி தன் நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தான் இயற்றவேண்டிய கர்மாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றும்போது அர்ஜுனனுக்கு என்ன வந்தது?

ஆமாம், கிருஷ்ணனைப் பொறுத்தவரை அவருடைய தகுதிக்குச் சரியான, நிறைவேற்றப் படவேண்டிய செயல் என்று எதுவும் இல்லை. ஆனாலும் அவர் செயல் புரிந்துகொண்டே இருக்கிறார். அவர் அடைய வேண்டியது என்றும் எதுவும் இல்லை; ஆனாலும், அவர் செயலாற்றிக்கொண்டே இருக்கிறார். அவரால் எல்லா செயல்களையும் விட்டுவிட முடியாதா? எல்லாவற்றையும் துறந்துவிட முடியாதா? முடியும். ஆனால் கிருஷ்ணனே இப்படி விட்டுவிட்டாரானால், துறந்தாரானால், அவரைப் பின்பற்றிவரும் மக்கள் அனைவரும் செயல்புரிவதை நிறுத்திவிட மாட்டார்களா?இதனால்தான் அவர் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார், தொய்ந்துவிடாமல் செயலாற்றிக் கொண்டிருக்க அர்ஜுனனுக்கு அறிவுறுத்தவும் செய்கிறார்.

(கீதை இசைக்கும்)

Related Stories: