குறளின் குரல் - திருக்குறளில் வாள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தமிழர்களின் வீரத்தின் சின்னமாக விளங்குவது வாள். தம் கருத்துகளை விளக்குவதற்குப் பல இடங் களில் வாளை உவமையாகப் பயன்படுத்துகிறார் வள்ளுவப் பெருந்தகை.

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்.

(குறள் எண் 334)

நாள் என்று நமக்குத் தோன்றும் காலம், உண்மையில் ஒரு கால அளவுகோல் மூலம், நம் உயிரை உடலிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாகவே உள்ளது. அறிஞர்களே இதை உணர்வர்.

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை

பேடிகைவாளாண்மை போலக் கெடும்.

(குறள் எண் 614)

படையைக் கண்டு அச்சமடையும் பேடி, வாளைக் கையிலெடுத்து என்ன பயன்? முயற்சி இல்லாதவன் பிறருக்கு உதவுவேன் என்று சொல்வது, போன்று பயனற்றதுதான்.

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு

நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

(குறள் எண் 726)

வீரர் அல்லாத மற்றவர் கையில் வாள் இருந்து என்ன பயன்? அதுபோலவே, அறிவுத் திறன் பெற்ற அவையினர் முன்னே அச்சம் கொள்பவர்க்கு அவர் கற்ற நூலால் என்ன பயன்?

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவைய

கத்துஅஞ்சு மவன்கற்ற நூல்.

(குறள் எண் 727)

கற்றவர் கூடிய அவையில் பேச அஞ்சுபவன் கற்ற நூல், போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள வாளுக்குச் சமமானது. அதனால் எந்தப் பயனும் இல்லை.

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு.

(குறள் எண் 882)

வாளைப் போல வெளிப்படையாகப் பகைமையைக் காட்டும் பகைவர்க்கு, அஞ்ச வேண்டியதில்லை. ஆனால், உறவினர் போலக் கூடவே இருந்து உட்பகை கொண்டவர்களின் தொடர்புக்குக் கட்டாயம் அஞ்சத்தான் வேண்டும்.நம் இதிகாசங்களிலும் புராணங்களிலும் பழைய இலக்கியங்களிலும் பல இடங்களில் வாள் குறிப்பிடப் பெறுகிறது. ராவணனின் `சந்திரஹாசம்’ என்ற வாள் பற்றிய குறிப்பு ராமாயணத்தில் வருகிறது. அது சிவன் கொடுத்த வாள்.

`இன்று போய் நாளை வா’ என்று ராமன் சொன்னபோது, ராவணன் பெரும் சோர்வடைந்தான். போர்க்களத்தில் சங்கரன் கொடுத்த வாளைக் கீழே போட்டுவிட்டு வெறும் கையோடு போர்க்களத்தை விட்டு இலங்கைக்குத் திரும்பினான் ராவணன் என்கிறார் கம்பர்.

`வாரணம் பொருத மார்பும்

வரையினை எடுத்த தோளும்

நாரத முனிவர்க் கேற்ப

நயம்பட உரைத்த வாயும்

தாரணி மவுலி பத்தும்

சங்கரன் கொடுத்த வாளும்

வீரமும் களத்தே போட்டு

வெறுங்கையோ டிலங்கை புக்கான்.’

ஓர் அபூர்வ ராமாயணம் அந்த சந்திரஹாச வாள் ராவணன் ஜடாயுவுடன் போரிட்டபோதே தன் சக்தியை இழந்து விட்டது எனத் தெரிவிக்கிறது. சிவபெருமான் அந்த வாளைக் கொடுக்கும்போது, ராவணனிடம் தர்ம நியாயங்களுக்கு உள்பட்டுப் போரிடும் வரையில்தான் அந்த வாள் சக்தி உடையதாக இருக்கும் என்றும், என்றேனும் அதர்ம நெறியில் வாளைப் பிரயோகித்தால் அதன்பின் அதன் ஒளி மங்கி அது சக்தி இழந்துவிடும் என்றும் நிபந்தனை விதித்தே வாளைக் கொடுத்தாராம்.

பறவையான ஜடாயுவுடன் போரிடும் போது போருக்குரிய அறநெறியை தன்னையறியாமல் மீறினான் ராவணன். ஜடாயு கருவி கொண்டு போர் நிகழ்த்தவில்லை. தன் உடலின் உறுப்பான அலகையே போருக்கான கருவியாக அது பயன்படுத்தியது. எனவே ராவணனும் உடலால் மற்போர் புரிந்திருக்க வேண்டுமே அல்லாது ஆயுதத்தைப் பிரயோகித்திருக்கக்கூடாது. எதிரியின் தாக்குதல் முறைக்குத் தகுந்தவாறு தாக்குதலே போர் தர்மம். கதாயுதத்தால் போரிட்டால் கதாயுதத்தாலேயே அதை எதிர்கொள்ள வேண்டும். வில்லும் அம்பும் கொண்டு போரிட்டால் விற்போரிலேயே எதிரியை எதிர்கொள்ள வேண்டும்.

ஆனால், ராவணன் உடல் உறுப்பான அலகுகொண்டு போரிட்ட ஜடாயுவின் சிறகுகளைத் தன் சந்திரஹாச வாளால் வெட்டி வீழ்த்தினான். அவ்வகையில் அறம் தவறிப் போரிட்டதால் அதன்பின் அந்த வாள் தன் சக்தியை இழந்துவிட்டது என்கிறது அந்த ராமாயணம். ராமாயணப் போரில், ராவணன் முதுகில் காயத்தோடு மயங்கிய நிலையில் அரண்மனைக்குத் திரும்பியதாகவும், அவன் புறமுதுகு காட்டி விட்டானே என்ற சோகத்தில் மண்டோதரி வருந்தியதாகவும் ஒரு ராமாயணம் பேசுகிறது.

மயக்கம் தீர்ந்து ராவணன் விழித்ததும் மண்டோதரி, புறமுதுகு காட்டி முதுகில் புண்பட்டுப் போரிலிருந்து மீண்டு வருவதை விட மாண்டிருக்கலாமே எனக் கசந்து பேசினாள். சீற்றம் கொண்ட ராவணன் நடந்ததை விளக்கினான். ஏற்கெனவே முன்னர் எப்போதோ இந்திரனோடு செய்த போரில் ராவணன் வென்றாலும், இந்திரனது யானையின் தந்தங்கள் ராவணன் மார்பைக் குத்தியிருந்தன. அவற்றைப் பிடுங்கி வீச இயலாததால், அவை ராவணன் மார்பின் உள்ளேயே தங்கியிருந்தன.

ராமனுடன் நிகழ்ந்த போரில், அனுமன் ராவணன் நெஞ்சில் ஓங்கிக் குத்தினான். அனுமனின் வலிமையான குத்தின் காரணமாக உள்ளே புதையுண்டிருந்த யானைத் தந்தங்கள் வேகம் தாங்காமல் முதுகின் வழியே வெளியே சிதறி வீழ்ந்தன. அப்படி ஏற்பட்ட புண்தான் அது என்று ராவணன் மூலம் அறிந்துகொண்டதும், மண்டோதரி தன் கணவனின் வீரத்தைப்பற்றி மகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்டாள் என்கிறது அந்தராமாயணம்.

மிகப் பழங்காலத்திலேயே தமிழர்களின் படைக்கருவியாக வாள் இருந்தது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது புறப்பொருள் வெண்பா மாலையில் வரும் ஒரு வெண்பா. அதன் கடைசி இரண்டு அடிகள் பெரும்புகழ் பெற்றவை. வெண்பா இதோ:

`பொய்அகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்

வையகம் போர்த்த வயங்குஒலிநீர் - கையகலக்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி.’

கல்தோன்றி மண்தோன்றாத மிகப் பழைய காலத்திலேயே வாளோடு தோன்றிய மிகப் பழங்குடியினராகிய தமிழர்கள், நாள்தோறும் புகழ்மிக்க செயல்களைச் செய்வதில் என்ன வியப்பு என்று வினவுகிறது இந்த அழகிய நேரிசை வெண்பா.சங்க காலத்தில் வாட்போரில் ஈடுபட்டு வாளால் வெட்டுப்படுதல் வீரத்தின் சின்னம் எனக் கருதப்பட்டிருக்கிறது. பகைவரால் சிறையில் அடைக்கப் பட்டிருந்த சேரமான் கணைக்கால் இரும்பொறை பகைவர் அளித்த தண்ணீரைக் குடிக்க மறுத்து மரணமடைந்தான். இறக்கும் முன், அவன் எழுதிய வீரம் செறிந்த பாடல் புறநானூற்றை அலங்கரிக்கிறது.

குழந்தை இறந்து பிறந்தாலும் பிறந்து இறந்தாலும், போரில் வாளால் வெட்டப்பட்டு இறக்கும் பேற்றினை அது தவறவிட்டு விடுகிறது. எனினும் அந்தக் குழவியை அல்லது தசைப் பிண்டத்தை அப்படியே அடக்கம் செய்ய மாட்டார்கள். அதை வாளால் கீறித்தான் அடக்கம் செய்வார்கள். அத்தகைய வீரமரபில் பிறந்த நான், சங்கிலியால் கட்டிய நாய்போல இந்தச் சிறைக்கு இழுத்துக் கொண்டுவரப்பட்டேன்.

நெஞ்சில் உரம் இல்லாமல் என் வயிற்றுப் பசி தீரும் பொருட்டு, தண்ணீர் கேட்டு உண்ணும் நிலைக்கு ஆளானேன். கெஞ்சிக் கேட்டு நீரருந்தி தாகம் தீர்த்து உயிர்வாழ்வேனோ?’ எனக் கேட்கிறான் சேரமான் கணைக்கால் இரும்பொறை இந்த சங்கப் பாடலில். `உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு’ என இது குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது தண்ணீர் அருந்தாமல் இறக்கும் முன், அந்தத் தன்மானம் மிக்க மன்னன் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறான். அந்தப் பாடல் இதோ:

`குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

ஆள்அன்று என்று வாளின் தப்பார்

தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய

கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்

மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத்

தாம் இரந்து உண்ணும் அளவை

ஈன்மரோ இவ் வுலகத் தானே?’

(சேரமான் கணைக்கால் இரும்பொறை: புறம் 74)

பொன்முடியார் என்ற பெண்பாற் புலவர் எழுதிய புறநானூற்றுப் பாடலொன்று வாளேந்திப் போரிடுதல் வீரர்க்குக் கடமை எனச் சொல்லி, வாளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

`ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்

களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.’

(பொன்முடியார்- புறம் 312)

`மகனைப் பெறுதல் தாயின் தலையாய கடமை. அவனை நற்பண்புகள் உடைய சான்றோனாக்குதல் தந்தையின் கடமை. வேல் முதலிய படைக்கருவிகளை அவனுக்கு உருவாக்கிக் கொடுத்தல் கொல்லனின் கடமை. அவனுக்குப் போரின் அறங்களைச் சொல்லி வழியனுப்பி வைத்தல் மன்னரின் கடமை. ஒளிபொருந்திய வாளைக் கையில் ஏந்திப் போர்செய்து யானைகளைக் கொன்று மீண்டுவருவது ஓர் ஆண்மகனின் கடமை’ என்கிறது இந்தப் பாடல்.

திருமாலுக்கு ஐந்து ஆயுதங்கள் உண்டு. சங்கு, சக்கரம், கதை, வில், வாள் என்பவையாகும். அவற்றில் திருமால் கையில் உள்ள வாளின் பெயர் நந்தகம் ஆகும். ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் இந்த ஆயுதத்தின் அம்சமாகக் கருதப்படுகிறார். எல்லா வாளும் துன்பம் தருவதில்லை. உயிரைப் போக்கும் வாள் உயிரைக் காப்பதும் உண்டு. மருத்துவர் அறுவை சிகிச்சையின் போது வாளால்தான் அறுவை சிகிச்சை செய்கிறார்.

ஆனால், அந்த வாள் உயிரைப் போக்குவதில்லை. காப்பாற்றுகிறது. இறைவன் தரும் சோதனைகளும், மருத்துவர் கையில் உள்ள வாளைப் போன்றவையே. கர்ம வினையை நீக்கி நம்மைக் கடைத்தேற்றுவதன் பொருட்டே கடும் சோதனைகளைத் தருகிறான் கடவுள் என்பதைப் புரிந்துகொண்டால் இடுக்கண் வரும்போதும் சிரிக்கமுடியும். குலசேகர ஆழ்வாரின் பாசுரம் ஒன்று இதை அழகாக விளக்குகிறது.`வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்மாளாத காதல் நோயாளன்போல் மாயத்தால்மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட் டம்மா நீஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே.’

வித்துவக் கோட்டத்தில் உறையும் திருமாலே! நீ எனக்கு எத்தனை துன்பம் தந்தாலும் என்ன? அவற்றிலும் அவற்றை நீ தருவதற்குக் காரணமான உன் அருளையே நான் பார்ப்பேன். அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவன், காயத்தை வாளால் அறுத்துச் சுட்டாலும், நோயாளி அவன்மேல் மாளாத அன்பையே கொண்டிருப்பான். அதுபோன்றதே நீ எனக்குத் தரும் துன்பங்கள்’ என்கிறார் குலசேகரர். பெண்களின் விழியை வாளுக்கு ஒப்பிடும் இலக்கிய மரபு இருக்கிறது. அந்த மரபில் பல திரைப்பாடல்களும் எழுதப் பட்டிருக்கின்றன. `அன்புள்ள அத்தான் வணக்கம்.. உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம்’ என்று தொடங்கும் கண்ணதாசன் பாடல் `கைராசி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் வரும்;  

`தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும் கண்ணிருந்தும் இல்லை உறக்கம்!’

என்ற வரிகள் பெண்ணின் கண்களை வாளோடு ஒப்பிடுகின்றன.

`இதய கமலம்’ திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதிய இன்னொரு பாடலிலும் வாள் விழிகளுக்கு உவமையாகிறது.

`தோள் கண்டேன் தோளே கண்டேன்

தோளிலிரு கிளிகள் கண்டேன்

வாள்கண்டேன் வாளே கண்டேன்

வட்டமிடும் விழிகள் கண்டேன்!’

- என்கிறார் கவியரசர்.

`குடியிருந்த கோயில்’ திரைப்படத்தில் கவிஞர் வாலியும் விழிக்கு வாளை ஒப்பிடுகிறார். `உன்விழியும் என் வாளும் சந்தித்தால் உனை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்!’ எனத் தலைவி தலைவனைப் பார்த்துப் பாடுவதாக எழுதுகிறார் அவர்.இவ்விதம், அன்றுதொட்டு இன்றுவரை இதிகாசங்களும் புராணங்களும் எண்ணற்ற இலக்கியங்களும் வாளைப் பற்றிப் பேசுகின்றன. இந்த வாள்சார்ந்த வீரமரபிற்கு மிகப் பழங்காலத்திலேயே வித்திட்டவர் நம் வள்ளுவர் என்பது கருதத்தக்கது.

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்

Related Stories: