சென்னை: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக, இந்திய ராணுவம் நேற்று நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை திரையுலகினர் வரவேற்றுள்ளனர். ரஜினிகாந்த், தனது எக்ஸ் பக்கத்தில், “போராளியின் போர் தொடங்கியது… இலக்கு முடியும் வரை நிறுத்த வேண்டாம். முழு தேசமும் உங்களுடன் உள்ளது” என பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் டேக் செய்துள்ளார்.
மேலும் ஜெய் ஹிந்த் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து முதலில் கருத்து தெரிவித்தவர் நடிகர் ரிதேஷ் தேஷ்முக். அவர், “ஜெய் ஹிந்த் ராணுவம்… பாரத் மாதா கி ஜே என்று பதிவிட்டார். அதேபோல், பாடகர் சோனு நிகமும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இயக்குனர் மதுர் பண்டார்கர், “எங்கள் பிரார்த்தனைகள் எங்கள் ராணுவத்துடன் உள்ளன. ஒரு தேசமாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம். ஜெய் ஹிந்த், வந்தே மாதரம்” என்று பதிவிட்டார்.
நடிகை குஷ்பு, ‘இந்தியாவுக்கான நியாயம் கிடைத்துள்ளது. நமது வீரர்களின் செயலால் பெருமைப்படுகிறேன்’ என தெரிவித்துள்ளார். நடிகை நிம்ரத் கவுர், “எங்கள் ராணுவத்துடன் ஒன்றுபட்டுள்ளோம். ஒரு நாடு. ஒரு குறிக்கோள். ஜெய் ஹிந்த், ஆபரேஷன் சிந்தூர்” என்று பதிவிட்டார். ஜூனியர் என்டிஆர், நாட்டின் நலனுக்காகவும் வீரர்களின் நலனுக்காகவும் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் அமிதாப் பச்சன் நள்ளிரவு 2 மணிக்கு ஒரு பதிவை வெளியிட்டார். அவர் மீண்டும் ஒரு புதிரான பதிவை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவில் அவர் எதுவும் பேசவில்லை. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் போதும் அவர் இவ்வாறே செய்தார். இந்தப் பதிவு ஆபரேஷன் சிந்தூருடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.
