சர்ச்சை பதிவுக்கு விஷ்ணு விஷால் விளக்கம்

சென்னை: சர்ச்சைக்குரிய டிவிட்டர் பதிவு தொடர்பாக நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு டிவிட்டரில் ஒரு பதிவை விஷ்ணு விஷால் வெளியிட்டிருந்தார். அதில், ‘வாழ்க்கை பாடம்’ என்ற ஹேஷ்டேக்குடன் ‘மீண்டும் முயற்சித்தேன். மீண்டும் தோல்வியடைந்தேன். மீண்டும் கற்றுக்கொண்டேன். கடைசி முறை தோற்றது என் தவறு இல்லை, அது துரோகம்’ என தெரிவித்து இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் முதல் மனைவியை பிரிந்து பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்த விஷ்ணு விஷால் வாழ்க்கையில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக நினைத்தனர். இது தொடர்பாக கருத்துகளை வெளியிட்டு வந்தனர். சமூக வலைத்தளங்களில் 2வது திருமணத்திலும் விஷ்ணு விஷாலுக்கு பிரச்னை என்ற தகவல் பரவியது.

இதையெல்லாம் அறிந்து விஷ்ணு விஷால் அதிர்ச்சியடைந்தார். இந்த கருத்துகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக நேற்று டிவிட்டரில் மற்றொரு பதிவை அவர் வெளியிட்டார். அதில், ‘என் பதிவு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அது தொழில் ரீதியானது. தனிப்பட்டதல்ல. ஒருவருக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு நம்பிக்கை. நாம் தோல்வியடையும் போது நம்மை நாமே குற்றம் சாட்டுகிறோம். நாமே கடினமாக இருக்கிறோம். நான் சொன்னது அவ்வளவுதான்’ என்று தெரிவித்துள்ளார். விஷ்ணு விஷால் கடைசியாக நடித்த கட்டா குஸ்தி படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதை மனதில் வைத்துதான் அவர் ‘வாழ்க்கை பாடம்’ பதிவை வெளியிட்டிருப்பார் என விஷ்ணு விஷாலின் விளக்கத்துக்கு பிறகு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: