விடுதலையில் நடிப்பதால் காமெடி வேடங்களை மறுத்தேன்: சூரி பேட்டி

சென்னை: இதுவரை காமெடி வேடத்தில் மட்டுமே நடித்த சூரி, தற்போது கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘விடுதலை’. புரட்சிகரமான வாத்தியார் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசை அமைத்துள்ளார். வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இப்படத்தை ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். முதல் பாகம் வரும் 31ம் தேதி திரைக்கு வருகிறது. 2ம் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஹீரோவாக நடிப்பது குறித்து சூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:  முதலில் இயக்குனர் வெற்றிமாறனுக்கு மிகப்பெரிய நன்றி. காரணம், என்னிடம் இப்படியொரு திறமை இருக்கிறது என்பதை நான் கண்டுபிடிப்பதற்கு முன்பே அவர் கண்டுபிடித்து, என்னை கதையின் நாயகனாக நடிக்க வைத்ததுதான். நான் நகைச்சுவை நடிகனாக வளர்ந்த பின்பு என்னை அணுகிய சில இயக்குனர்கள், என்னை கதாநாயகனாக நடிக்க வைக்க கதை கூறினர். ஆனால், எல்லாமே நகைச்சுவை கதைகளாகவே இருந்தன. மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் நான் காமெடி வேடத்தில் நடிப்பதால், அக்கதைகளில் நடிக்க முடியவில்லை என்று சொன்னேன்.

 நான் கதாநாயகனாக நடிக்கும்போது, பல படங்களில் காமெடி வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ‘விடுதலை’ படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று, அப்படங்களில் நடிக்க மறுத்துவிட்டேன். நான் ஹீரோவாக நடிப்பதை அறிந்த ரஜினிகாந்த், என்னை மனம் திறந்து வாழ்த்தினார். அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத் இயக்கும் படத்திலும், விக்ரம் சுகுமாறன் இயக்கும் படத்திலும், அமீர் இயக்கும் படத்திலும் கதையின் நாயகனாக நடிக்கிறேன்.

Related Stories: