லம்பாடி அம்மனுக்கு குழந்தைப்பொங்கல்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மெட்டுக்கல் கிராமத்தில் லம்பாடி இனப்பெண்ணிற்கு கோயில் அமைத்ததோடு, குழந்தைகளின் அழுகையை கட்டுப்படுத்தி, நோய் நொடியின்றி பாதுகாப்பதாகக்கருதி, இக்கோயிலில் ‘குழந்தைப்பொங்கல்’ வைத்து வழிபாடு நடத்துவது இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

200 ஆண்டுகளுக்கு முன், வாழப்பாடி அருகிலுள்ள ஏ.குமாரபாளையம் மற்றும் மெட்டுக்கல் கிராமங்கள் வழியாக, அழகான தோற்றமுடைய நிறைமாத கர்ப்பிணியான மலைவாழ்

லம்பாடி இன பெண் ஒருவர் வழிப்போக்கராக வந்துள்ளார்.இருள் சூழ்ந்து கொண்டதால் சொந்த கிராமத்திற்கு செல்ல முடியாத அவர், மெட்டுக்கல் மற்றும் குமாரபாளையம் கிராம எல்லையில் சாலையோரத்தில் இருந்த எட்டி மரத்தடியில் தங்கியுள்ளார்.கிராமத்திலுள்ள குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்துள்ளார். மரத்தடியிலேயே அழகான குழந்தையை பெற்றெடுத்த அவரும்,

குழந்தையும் எதிர்பாராத விதமாக அந்த இடத்திலேயே இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த லம்பாடி இன பெண்ணிற்கு எட்டிமரத்தடியிலேயே சிலை வைத்து அப்பகுதி மக்கள், பெண் தெய்வத்திற்கு காவலாக கருதி, அந்த சிலைக்கு அருகில் முறுக்கு மீசை முனியப்பன் ஸ்வாமியையும் பிரதிஷ்டை செய்து இன்றளவும் தொடர்ந்து பராமரித்து வழிபட்டு வருகின்றனர்.குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள், தங்களது குழந்தையுடன் சென்று, லம்பாடி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டால், குழந்தைகளின் அழுகையை கட்டுப்படுத்தி, நோய்நொடி வராமல் லம்பாடி அம்மன் பாதுகாப்பதாக, இப்பகுதி மக்களிடையே நம்பிக்கை தொடர்ந்து வருகிறது.

இதனால், ஏ.குமாரபாளையம், மெட்டுக்கல், கல்யாணகிரி, செக் கடிப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள், பிறந்த குழந்தைகளை, லம்பாடி அம்மன் கோயிலுக்கு  கொண்டு சென்று குழந்தைப்பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் வினோதம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.லம்பாடி அம்மனுக்கு குழந்தைப்பொங்கல் வைத்து வழிபடுவதை அப்பகுதி மக்களின் பெரும் நம்பிக்கையாக உள்ளது.

Related Stories: