வந்தனை செய்வாரை வாழ்விக்கும் கந்தவேள்

இறைத்திருவருளை மக்கள் பெற வேண்டிய வழிகள் பலவற்றுள் அவ்வத் தெய்வங்களுக்குகந்த விரதங்களை மேற்கொள்வதும் ஒன்றாகும். முருகன் திருவருளைப் பெறுவதற்குசெவ்வாய்கிழமை விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம் ஆகியவற்றை மேற்கொள்ளுதல் வேண்டும். இக் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளும் முறையினையும் முருகப்பெருமானின் சிறப்பினையும் கந்தபுராணம் தெளிவாக எடுத்தியம்புகிறது.

கந்தபுராணம் நமது சொந்தப்புராணம் ஆகும். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களால் கட்டப்பட்டது நமது ஆன்மா. ‘செம்பில் களிம்பு போன்று ஆன்மாக்கள் ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டுள்ளன.ஆனால் ஆன்மாக்கள் மண்ணுலகில் பிறப்பெடுத்ததன் அடிப்படை நோக்கம் உலக இன்பங்களையும் நேரிய வழியில் பெற்று இன்புற்று, இறுதியில் வீடுபேறு உற்ற நிலையில் இறைவனுடன் இரண்டறக் கலத்தல் என்பதற்கேயாகும். எனவே முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் ஆன்மா தனது கன்ம வினைகளைக் கட்டறுத்து  இறுதி இலக்காகிய வீடுபேற்றினை அடையலாம் என்பதே முருக வழிபாட்டின் அடிப்படைக் குறியீடாகும். அநாதியாகிய ஆணவம், கன்மம்.

மாயை ஆகிய மும்மலங்களை மட்டுமன்றி அறுவகைப் பகைவர்களாகிய காமம், குரோதம், உலோபம்,  மோகம், மதம். மாச்சர்யம் ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல். தன்வயமுடைமை, வரம்பின்மை. இயற்கையுணர்வு. பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டுவதால் ஒப்பரும் விரதம் எனக் கந்தசஷ்டி விரதச் சிறப்பினைக் கந்தபுராணம் எடுத்துரைக்கின்றது.யானைமுகமுடைய சூரனை முருகப்பெருமான்  வெல்வது மாயையை ஒழிப்பதாகும். சிங்கமுகமுடைய சூரனை முருகப்பெருமான் வெல்வது கன்மத்தை ஒழிப்பதாகும். சூரபதுமனை முருகப்பெருமான்  வெல்வது ஆணவத்தை அழிப்பதாகும். இத்தகைய தத்துவத்தை விளக்குவதே சஷ்டி விரதத்தின் உட்பொருளாகும்.

சூரபதுமன் தான் பெற்ற வரத்தினைக் கொண்டு தேவர்களுக்கு துன்பம் விளைவித்தான்.  அவனைக் கொன்று தேவர்களைக் காக்க வேண்டியது முறைமை என்று உளம்கொண்ட முருகன் அவனோடு போர்புரியத் தொடங்கினார்.  அப்போது சூரபத்மன்  மாயிருள் உருவம் கொண்டு மறைந்து நின்று ஆர்ப்பரித்தான்.  முருகப் பெருமான் தன் திருக்கரத்தில் உள்ள திரு

நெடும் வேலை நோக்கி, ‘இவன் ஆகம் போழ்ந்து வருகுதி” என்று கட்டளை இட்டார். சூரன் தன் மீது முருகப்பெருமான் வேல் வருதலை அறிந்து, ‘‘முடிவிலா வரத்தினேனை என் இவன் செய்யும் அம்மா இவன் விடும் எஃகம்” என்று எள்ளி நகையாடிக் கடல் நடுவே மாமரமாக நின்றான். மாவடிவமாகிய  சூரனை இரு பிளவாக வேல் பிளந்தது.

என்பதனை,

“உடம்பிடித் தெய்வம் இவ்வா றுருகெழு செலவின் ஏகி

மடம்பிடித் திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்த தன்றே”

- எனக் குறிப்பார் கச்சியப்பர்.

இருபிளவாகப் பிரிந்த  சூரபத்மன்  வீழ்ந்தும் இறந்தான் இல்லை. அவ்விரு பிளவுகளுள் ஒரு பிளவில் மயில் வடிவும் மற்றொரு பிளவினுள் சேவல்

வடிவும்  கொண்டு  முருகன் முன்னர் வந்து நின்றான். அதுபோது முருகப்பெருமான், சேவலை  நோக்கிக் ‘கடிதில்நீ கொடியாகி ஆர்த்தி’ என்று கூறிச் சேவலைக் கொடியாகக் கொண்டும், மயிலை நோக்கி, ‘சுமக்கு எம்மை’ என்று கூறிப் பார், திசை, வானம் முற்றும் பரி என நடத்தலுற்றார். இவ்வாறு தீயனாகிய சூரன் இறுதியில் முருகன் திருவருளால் இன்பமே உற்றான்.

இதனைக் கந்தபுராணம்,

“தீயவை புரிந்தா ரேனும் குமரவேள்

திருமுன் உற்றால்

தூயவர் ஆகி மேலைத் தொல்கதி அடைவர் “

- என்று பாராட்டுகின்றது. முருகப் பெருமான் மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியாகவும் கொண்டதற்கு மிக இன்றியமையாத காரணம் உண்டு. அருணகிரிநாதர் மயிலின் மாண்பைப் பற்றிப் பேசும் இடத்தில் மயில்  ‘ஆனதனி மந்திர ரூபநிலை கொண்டது ஆடுமயில்” எனக் குறிப்பார். மயில் தன்னுடைய தோகையை விரித்த நிலையில் முருகன் அதில் இருக்கும் தோற்றமானது  மயில் பிரணவம் போல விளங்க, அதன் இடையே முருகப்பெருமான் பிரணவ நாதனாய் விளங்குவதனை உணர்த்தி நிற்கும்.  இக்குறிப்பினைச் சிதம்பர சுவாமிகள்.

‘செறி கலப மயில் முதுகில் உதய சின்மய தூய’ - என்றருளிச் செய்வார். சேவல் நாததத்துவத்தின் குறியீடு ஆகும். முருகன் கொடியாக ஏந்திய சேவல் அடியார்களின்  அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞானமாகிய ஒளியினில் செல்ல வழிகாட்டுவதாகும். அதாவது பிறப்பு என்னும் தூக்கம் நீங்க அது கூவும் இயல்பினை உடையது ஆகும்.  இதனைச் சிதம்பர சுவாமிகள்,

“மலஇரவு விடிய மிகுதுறவுணர்வு நசையறுதன்

மலிகுணக் குன்றின் முடிமேல் மன்று ஞானக்கதிர் எழுந்தொளிபரப்ப

மாறாது தசநாத முழுதும் அலகில் பவதுயில் அறக்கூவுசேவல்”

- எனப் பாடி அருளுவார்.

 இத்தனை சிறப்பிற்குக் காரணமாகிய கந்தசஷ்டி விரதம் என்பது  ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை திதி முதல் ஆறாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் நோற்கப்பட்டு சூரசம்ஹார நிகழ்வுடன் நிறைவு பெறுவதாகும். வசிட்டர் முசுகுந்தச் சக்கரவர்த்திக்குக் கந்தசஷ்டி விரத மகிமையையும் வரலாற்றையும் விதிமுறைகளையும் எடுத்துரைக்கின்றார். இவ்விரதம் சாலச் சிறந்தது என்பதற்குப் பல காரணங்கள் உண்டு.  இவ்விரதத்தைப் பற்றிக் கூறுகையில் ‘ஒப்பறு விரதம் வேறு ஒன்று உள்ளது உரைப்பக் கேண்மோ!” என்று குறிப்பிடுகின்றார். இக் கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்பவர், பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளைக் கச்சியப்ப சிவாச்சாரியார்,

“முந்திய வைகல் ஆதி மூவிரு நாளும் காலை

அந்தமில் புனலில் மூழ்கி ஆடைஓர் இரண்டு தாங்கிக்

சந்தியில் கடன்கள் செய்து தம்பவிம்

பங்கும் பத்தில்

கந்தனை முறையே பூசை புரிந்தனர் கங்குவ் போதில்”

- எனக் குறிப்பர்.; ‘விரதம்’ என்பதற்கான வரைவிலக்கணத்தை, ‘மனம்: பொறி வழி போகாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும், சுருக்கியேனும்: மனம், வாக்கு காயம் எனும் மூன்றினாலும் இறை அன்போடு. கடவுளை விதிப்படி வழிபடல்’ என விளக்குவார் ஆறுமுகநாவலர்.கந்தசஷ்டி விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து கைக்கொள்ளப்பட வேண்டும். இவ்விரதம் மேற்கொள்வோர் விரத நாட்களில் வைகறையில் துயில் எழுந்து சந்தியாவந்தனம் முதலிய  செய்து ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று தண்ணீரில் அறுகோணம் வரைந்து அதில் சடாச்சர மந்திரத்தை எழுத வேண்டும். ஓம் என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி முருகனை மனதில் இருத்தி நீரில் மூழ்கி எழ வேண்டும். கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று  நீராடி தோய்த்துலர்ந்த ஆடையணிந்து ஆலயத்தில் அமர்ந்து துன்பம்  நீக்கும்  முருகப்பெருமானை நினைந்து வணங்கல் வேண்டும்.

இந்த ஆறு நாட்களும்.. உணவு உண்ணாமல் இருப்பது  அல்லது ஒரு நேர உணவு என்பது விரத நியதி ஆகும்.உணவையும் உறக்கத்தையும் தவிர்த்துச்  செய்யும் தவமே கந்தசஷ்டி விரதம் என்பதாகும். அதற்குரிய பலன்களாக இவ்வுலக இன்பங்கள் வந்தமைவதுடன்  மும்மலம் நீங்கி ஆன்மா முக்தியைப் பெறுவதும் வந்தமையும்.

இந்த வருடம் கந்தசஷ்டி விரதம் ஐப்பசி மாதம் 18 ஆம் நாள் ( 04 - 11- 2021 ) வியாழக்கிழமை அன்று தொடங்குகின்றது. கரம் குவிப்பார் நெஞ்சத்துக் கவலை எல்லாம் தீர்த்தருளும் கலியுகக் கடவுளாம் கந்தப் பெருமானைக் கந்தசஷ்டி விரதத்தில் வாயால் பாடி மனதால் சிந்தித்துத் தூயோமாய் வந்து தூமலர்த் தூவித் தொழுது வரம்பெற்று மகிழ்வோமாக!“ஆறிரு தடந்தோள் வாழ்க! ஆறுமுகம் வாழ்க!”

முனைவர் மா. சிதம்பரம்

Related Stories: