சென்னை: மலையாள மெகா ஸ்டார் மோகன்லால், தனது நெருங்கிய நண்பரும், மலையாள மெகா ஸ்டாருமான மம்மூட்டி விரைவில் குணமடைய வேண்டும் என்று, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரார்த்தனை செய்தார். இத்தகவல் வைரலான நிலையில், சென்னையில் நடந்த ‘எல் 2: எம்புரான்’ என்ற படத்தின் புரமோஷனில் பங்கேற்ற ேமாகன்லாலிடம், மம்மூட்டிக்காக பிரார்த்தனை செய்தது குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த மோகன்லால், ‘இதை ஏன் வெளியே சொல்ல வேண்டும்? சபரிமலைக்கு சென்று, மம்மூட்டி உடல்நிலை தேறுவதற்காக பிரார்த்தனை செய்தேன். அங்குள்ள தேவசம்போர்டு அதிகாரி ஒருவர் இதை மீடியாவுக்கு சொல்லிவிட்டார். ஆனால், இதை ஏன் வெளியே சொல்ல வேண்டும்? இது எங்களின் தனிப்பட்ட விஷயம். நீங்கள் யாருக்காக பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று ஏன் சொல்ல வேண்டும்? ‘நான் உங்களுக்காக வேண்டுகிறேன்’ என்று சொல்பவர்கள் இருக்கின்றனர். அவர்கள் வேறு ஏதாவது பேசுவார்கள்.
நீங்கள் ஒருவருக்காக வேண்டிக்கொள்வேன் என்று சொன்னால், கண்டிப்பாக வேண்டிக்கொண்டே ஆக வேண்டும். மம்மூட்டி என் நண்பர், பிரதர். அவருக்காக நான் பிரார்த்தனை செய்ததில் தவறு இல்லை. உங்களுக்காகவும் நான் பிரார்த்தனை செய்வேன். தற்போது மம்மூட்டி நலமாக இருக்கிறார். மற்றவர்களை போல் அவருக்கும் ஒரு சின்ன பிரச்னை இருக்கிறது, அவ்வளவுதான்’ என்றார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நாளை திரைக்கு வரும் ‘எல் 2:
எம்புரான்’ படத்தை ஆசிர்வாத் சினிமாஸ், லைகா புரொடக்ஷன்ஸ், ஸ்ரீகோகுலம் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளன. முரளி கோபி கதை எழுத, தீபக் தேவ் இசை அமைத்துள்ளார். நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்க, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 2019ல் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கிய ‘லூசிஃபர்’ முதல் பாகம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததால், 2ம் பாகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், ‘ஆடுகளம்’ கிஷோர், அபிமன்யு சிங், சுராஜ் வெஞ்சரமூடு உள்பட பலர் நடித்துள்ளனர்.