இறைவன் ஈடு இணையற்றவன்!

மகன், தந்தையை நோக்கி  ஒரு கேள்வி கேட்டான். “அப்பா, இறைவனுக்கு இணை வைக்கக்கூடாது, இறைவனுக்கு உருவமோ படமோ கற்பிக்கக்கூடாது என்று குர்ஆன் கூறுகிறதே அது ஏன்?” தந்தை விளக்கினார்.  “இறைவன் ஈடு இணையற்றவன். அவனைப் போல் ஆற்றலோ வலிமையோ கொண்டவர்கள் வேறு யாரும் இல்லை என்பதால் இறைவனுக்கு இணை வைக்க வேண்டாம் என்று குர்ஆன் கூறுகிறது. கடந்த முறை உன் பள்ளியில் நடந்த ஓவியப் போட்டியில் நீ அழகான மலை ஒன்றை வரைந்து முதல் பரிசு பெற்றாய் அல்லவா?” “ஆமாம்.” “அந்த மலையின் படத்தை வரைந்தது நீதான். ஆனால் உன்னை விட்டுவிட்டு வேறு ஒரு  மாணவருக்கு அதற்கான பரிசை வழங்கலாமா? அது நீதியாக இருக்குமா?” என்று கேட்டார் தந்தை.

 “அது எப்படி நீதியாக இருக்க முடியும்? ஓவியமே வரையாத ஒரு மாணவனுக்கு முதல் பரிசு வழங்குவது அநீதியும் அக்கிரமமும் ஆகும்.” “அதையேதான் இறைவனும் சொல்கிறான். யார் எந்தப் பொருளையும் படைக்கவில்லையோ, யார் எதையும் உருவாக்கவில்லையோ அவர்களை இறைவன் என்பதும் இறைவனுக்குச் சமமான மரியாதையை அவர்களுக்கு அளிப்பதும் அநீதி என்கிறான்.குர்ஆன் கூறுகிறது.“உண்மையில் இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அக்கிரமம் ஆகும்.”(குர்ஆன் 31:13)  “சரி, இணைவைக்கக்கூடாது என்பது புரிகிறது.  இறைவனுக்கு உருவமோ படமோ வரையக்கூடாது என்று ஏன் குர்ஆன் சொல்கிறது?” இது மகனின் அடுத்த கேள்வி.  “இதற்கு நம் பெரியவர்கள் ஒரு பழமொழியாகவே விடையைச் சொல்லியுள்ளார்களே?” “பழமொழியில் விடையா? என்ன அது?”

“கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர். அதாவது இறைவனைப் பார்த்தவர்கள் அவன் எப்படி இருப்பான் என்று சொன்னதில்லை. இறைவன் இப்படி, இப்படி இருப்பான் என்று சொல்பவர்கள் அவனை நேரில் பார்த்ததில்லை. ஆகவே யாரும் பார்க்காத ஒருவனுக்கு உருவம் சமைப்பது சரியில்லைதானே?” “ஆமாம். சரியில்லைதான்.”அதனால்தான் இஸ்லாமிய வாழ்வியல் இறைவனுக்கு உருவம் கற்பிக்க வேண்டாம் என்றும் அவ்வாறு  பரம்பொருளுக்கு உருவம் ஏற்படுத்துவது அநீதியான, பாவமான காரியம் என்றும் கூறுகிறது. இறைவன் ஒருவன், தனித்தவன் என்பது குறித்து அதர்வணவேதத்தில் அருமையாக ஒரு ஸ்லோகம் உள்ளது. அதன் மொழிபெயர்ப்பை உனக்குச் சொல்லட்டுமா?” “சொல்லுங்கப்பா” “இறைவன் இரண்டும் இல்லை, மூன்றும் இல்லை.

அவனை நான்கென்றும் கூற இயலாது. அவன் ஐந்தும் இல்லை, ஆறும் இல்லை, ஏழும் இல்லை, எட்டும் இல்லை, ஒன்பதும் இல்லை, பத்தும் இல்லை. அவன் தனித்தவன். சுவாசிப்பவர்களையும் சுவாசிக்காதவர்களையும் தனித்தனியாகப் பார்க்கிறவன். அனைத்து வல்லமையும் உடையவன். யாருடைய பேராதிக்கத்தில் அனைத்து உலகமும் உள்ளதோ அவன் மாபெரும் வல்லமை உடையவன். அவன் ஒருவன். அவனைப் போன்றவன் ஒருவனும் இல்லை. நிச்சயமாக அவன் ஒருவனே.” (அதர்வண வேதம் 13:4:16)“அனைத்து வேதங்களின் அடிப்படைக் கருத்தும் பரம்பொருள் ஒன்றே என்பதுதான் இல்லையா அப்பா?”   “சரியாகச் சொன்னாய். வேதங்களின் வரிசையில் இறுதியாக அருளப்பட்டதுதான் குர்ஆன். முந்தைய வேதங்கள் கூறும் ஓரிறைக் கொள்கை இந்த இறுதிவேதத்திலும் அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது.    எல்லாருக்குமான ஓர் இறைவன், இணைதுணையற்ற  தனித்தவன். புரிகிறதா?”எளிமையான விளக்கம் கிடைத்த மகிழ்ச்சியில் தலையாட்டினான் மகன்.

   

  - சிராஜுல்ஹஸன்

Related Stories: