லியோ விமர்சனம்

இமாச்சலப் பிரதேசம் தியோக் என்ற ஊரில் காபி ஷாப் நடத்துகிறார், பார்த்திபன் என்கிற விஜய். அவருக்கு அழகான மனைவி திரிஷா, மகன் மேத்யூ தாமஸ், மகள் பேபி இயல் இருக்கின்றனர். ஊருக்குள் மிஷ்கின் தலைமையிலான கேங்ஸ்டர் கூட்டம் நுழைகிறது. அதில் ஒருவரான சாண்டி, பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வதில் மும்முரமாக இருக்கிறார். இக்கூட்டம் வழிப்பறி கொள்ளை மற்றும் கொலையில் ஈடுபடுகிறது. ஒருநாள் விஜய் நடத்தும் காபி கடைக்குள் நுழைந்துவிடுகிறது. விஜய்யின் மகளைக் குறிவைக்கிறார், சாண்டி. அதுவரை அப்பாவியாக இருந்த விஜய், அடுத்த விநாடி பொங்கி எழுந்து ஒரே நிமிடத்தில் 5 பேரையும் சுட்டுத்தள்ளுகிறார்.

இதனால், அப்பகுதியின் திடீர் ஹீரோ ஆகிறார் விஜய். சில நாட்களுக்குப் பிறகு அண்டர்கிரவுண்ட் போதை உலகின் சக்ரவர்த்தியான சஞ்சய் தத், அவரது தம்பி அர்ஜுன் ஆகியோர் விஜய் இருக்கும் இடத்தை தேடி வருகிறார்கள். ‘நீ என் மகன் லியோ. நமது போதை சாம்ராஜ்யத்தை மீண்டும் கட்டமைக்க என்னுடன் வா’ என்று சஞ்சய் தத் கெஞ்சுகிறார். ‘நான் லியோ இல்லை… பார்த்திபன்’ என்று மறுக்கிறார், விஜய். உண்மையில் அவர்தான் போதை சாம்ராஜ்யத்தின் இளவரசனாக இருந்த லியோவா? அவர் எப்படி இந்த ஊருக்கு வந்து காபி ஷாப் நடத்துகிறார்? சஞ்சய் தத், அர்ஜூன் கூட்டம் அவரை என்ன செய்கிறது என்பது மீதி கதை. அப்பாவியாக இருக்கும் ஹீரோ திடீரென்று ஆக்‌ஷன் அவதாரம் எடுத்தால் பொறி பறக்கும் என்பது ‘பில்லா’, ‘பாட்ஷா’ காலத்து பார்முலா.

அதையே தனது பாணியில், ஹாலிவுட் ஸ்டைலில், பரபரப்பான அதிரடி ஆக்‌ஷன் படமாகவும், கூடவே பேமிலி சென்டிமென்டையும் கலந்து, இரண்டேமுக்கால் மணி நேரம் ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடுகிறார், இயக்குனர் லோகேஷ் கனகராஜ். வித்தியாசமான ஹேர்ஸ்டைல், 18 வயது மகனுக்கு அப்பா, செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழ்ந்து, விலங்குகளையும் நேசிக்கும் ஒருவர் என்று, முற்பகுதி கதையில் அதிகமாக ஈர்க்கிறார் விஜய். திரிஷா தன்னை சந்தேகப்பட்டதைச் சொல்லி கதறியழும் காட்சியும், மகள் இயலை நோக்கி சாண்டி நெருங்கும்போது நெருப்பாய் மாறும் சூழலும், மகனின் பெருமையை முகத்தில் காட்டும் தருணமுமாக, திரையில் இதுவரை பார்க்காத விஜய்யைப் பார்க்க முடிகிறது. பிற்பகுதியில் ஒவ்வொரு காட்சியிலும் விஜய்யின் அடி, அதிரடி சரவெடிதான்.

அன்பும், அக்கறையும் கொண்ட மனைவியாக வரும் திரிஷா, விஜய்யைக் கூலாக்க லிப்லாக் காட்சியில் நடித்து பரவசப்படுத்துகிறார். வன இலாகா அதிகாரி கவுதம் வாசுதேவ் மேனன், அதிரடி வில்லன் சஞ்சய் தத், அவரது தம்பி அர்ஜுன், கேங்ஸ்டர் தலைவன் மிஷ்கின், விஜய் தங்கை மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியம் ஆகியோருக்கு அழுத்தமான கேரக்டர்கள் கிடைத்துள்ளது. பிரியா ஆனந்த், அனுராக் காஷ்யப், பாபு ஆண்டனிக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. படத்தின் தொடக்கத்தில் வரும் கழுதைப்புலி சண்டைக்காட்சியில் இருந்து, கிளைமாக்ஸ் புகையிலை கம்பெனி சண்டை வரை, ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் கூட்டணியின் கடுமையான உழைப்பு தெரிகிறது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு ஹாலிவுட் தரம். அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட். பின்னணி இசையில், மிரட்டுகிறார். கிளைமாக்சில் எல்சியூவில் படம் இணைந்து கமல்ஹாசனின் குரல் ஒலிப்பது சர்ப்பிரைஸ் பேக்கேஜ். லாஜிக் பற்றி கவலைப்படவில்லை என்றால், விஜய் ரசிகர்களுக்கு இது அட்வான்ஸ் தீபாவளி கொண்டாட்டம்.

The post லியோ விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: