நீச்சல் போட்டிகளில் 120 தங்க பதக்கங்களை வென்ற இலங்கை அகதியான கல்லூரி மாணவி பாஸ்போர்ட் கேட்டு வழக்கு: ஒன்றிய அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீச்சல் போட்டியில் 120 தங்க பதக்கங்களை வாங்கிய இலங்கை அகதியான கல்லூரி மாணவி இந்திய பாஸ்போர்ட் கேட்டு தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்சியை சேர்ந்த இலங்கை அகதியான தனுஜா என்ற கல்லூரி மாணவி தாக்கல் செய்த மனுவில், நான் 2006ல் இலங்கையில் பிறந்தேன். இலங்கையில் ஏற்பட்ட போர் நெருக்கடி காரணமாக எனது தாயுடன் தமிழகத்திற்கு கடந்த 2007ல் அகதியாக வந்தோம்.

இங்கு முகாம் இல்லாத அகதியாக தங்க அனுமதிக்கப்பட்டு தற்போது திருச்சி கே.கே.நகரில் வசித்து வருகிறோம். நான் 12வது வகுப்பு முடித்து தற்போது திருச்சி பிஷப் ஹீப்பர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். சிறு வயதில் இருந்தே நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். மாவட்ட, மாநில, தேசிய அளவில் 120 தங்க பதக்கங்கள், 50 வெள்ளி மற்றும் 30 வெண்கல பதக்கங்களை வென்றிருக்கிறேன். 30 சேம்பியன்ஷிப் பதக்கங்களை வாங்கியிருக்கிறேன்.

கடந்த 2016ல் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் முதல் பரிசை வென்றேன். 2019ல் நடந்த தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் முதல் பரிசை பெற்றேன். 2024ல் நடந்த முதல்வர் கோப்பைக்கான நீச்சல் போட்டியில் 2 தங்க பதக்கங்களை வென்றேன். தனுஷ்கோடியிலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு நீந்தி செல்ல அனுமதி கேட்டேன். எனக்கு இந்திய பாஸ்போர்ட் இல்லாததால் அனுமதி மறுக்கப்பட்டது.

சர்வதேச போட்டிகளில் இந்திய பாஸ்போர்ட் இல்லாமல் பங்கேற்க முடியவில்லை. இலங்கையின் ஸ்திரத்தன்மையற்ற அரசியல் சூழல் காரணமாக இலங்கை செல்ல எனக்கு விருப்பமில்லை. சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் இந்தியாவுக்காக பங்கேற்க எனக்கு வாய்ப்பளிக்கும் வகையில் எனக்கு இந்திய பாஸ்போர்ட் வழக்குமாறு கடந்த 2024 அக்டோபர் 24ம் தேதி திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விண்ணப்பித்தேன். எந்த பதிலும் இல்லை.

எனவே, எனக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்குமாறு பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டி.மரியோ ஜான்சன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதில் தருமாறு திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

The post நீச்சல் போட்டிகளில் 120 தங்க பதக்கங்களை வென்ற இலங்கை அகதியான கல்லூரி மாணவி பாஸ்போர்ட் கேட்டு வழக்கு: ஒன்றிய அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: