இன்று உலக வாய் சுகாதார தினம்: 95 சதவீதம் பேர் வாய் நோயால் பாதிப்பு; மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னை: மக்கள் தொகையில் 95 சதவீதம் பேர் வாய் நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வாய் ஆரோக்கியக் குறைபாடுகள் பல் சொத்தை, ஈறு நோய்கள், வாய் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள், நீரிழிவு போன்ற பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகள் இல்லையென்றால், வாய்வழி நோய்கள் ஏற்படும். இது ஒட்டுமொத்த உடல் நலத்தையும் பாதிக்கலாம். உலகளவில் கிட்டத்தட்ட 3.5 பில்லியன் மக்களுக்கு வாய் நோய்கள் பாதிப்பு ஏற்படுத்துகிறது.

இதை மனதில் கொண்டு, உலக வாய் சுகாதார தினம் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாள், வாய் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. உலக வாய் தினத்தின் நோக்கம், மக்களிடையே பல் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பல் சொத்தை, ஈறு நோய்கள், வாய் புற்றுநோய் போன்றவற்றைத் தடுப்பதற்கான எளிய வழிமுறைகளைப் பரப்புவதுமாகும். மக்கள் தொகையில் 95 சதவீதம் பேர், தங்கள் வாழ்நாளில் ஏதோ ஒரு கட்டத்தில் வாய்வழி நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் என அரசு பல் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: வாய் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது உணவு உண்பதற்கும், பேசுவதற்கும், மேலும் சமூக தொடர்பு, தன்னம்பிக்கை மற்றும் முறையான முழுமையான ஆரோக்கியத்தை அடைவதற்கு உதவுகிறது. உலக மக்கள் தொகையில் 95 சதவீதம் பேர், தங்கள் வாழ்நாளில் ஏதோ ஒரு கட்டத்தில் வாய் நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். பல ஆண்டுகளாக வாய்வழி புற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து கொண்டுவருகிறது. குறிப்பாக பல் சொத்தை, ஈறு நோய்கள், பல் அமைப்பு குறைபாடு, பல் புளோரோசிஸ் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். பல் சிகிச்சை விலை உயர்ந்ததல்ல, புறக்கணிப்பது தவறு என்பதை நோயாளிகள் உணர வைக்கக்கிறது. பற்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். இதனை எல்லாம் தவிர்க்க ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும், உணவு பிறகு வாய் கொப்பளிக்க வேண்டும் உள்ளிட்ட பொதுவான நடைமுறைகளை பின்பற்றினால் பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

வாய் நோய்கள் என்னென்ன
* பல் சொத்தை
* ஈறு நோய்கள்
* பல் அமைப்பு குறைபாடு
* பல் புளோரோசிஸ்
* பல் எலும்பு முறிவு
* வாய் புற்றுநோய்
* தாடை மூட்டு
* எலும்பு நோய்கள்
* வாய் புண்கள்

வாய் நோய்களில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்
* தினம் காலை மற்றும் இரவு பல் துலக்க வேண்டும்.
* நாக்கை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும்.
* ஒவ்வொரு உணவு மற்றும் சிற்றுண்டிக்குப் பிறகும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
* ஒட்டும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
* போதுமான அளவு நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
* நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
* சர்க்கரை மற்றும் அமில பானங்கள் தவிர்க்க வேண்டும்.
* ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

The post இன்று உலக வாய் சுகாதார தினம்: 95 சதவீதம் பேர் வாய் நோயால் பாதிப்பு; மருத்துவர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: