ஒன்றிய அரசின் பங்களிப்பு தொகையாக தமிழ்நாட்டுக்கு ரூ.2.63 லட்சம் கோடி நிலுவை: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 – 26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பின்வருமாறு:
கோவை தெற்கு – வானதி சீனிவாசன் (பாஜ): கடன் வாங்கும் முதன்மை மாநிலமாக இருப்பதில் இருந்து மாற்று ஏற்பாட்டுக்காக செல்லும் தொலைநோக்குப் பார்வைக்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இல்லை.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: மராட்டியத்தில் ஆளும் பாஜ அரசின் கடன் ரூ.8 லட்சம் கோடிக்கும் அதிகம். தமிழகம் 21% வாங்கியிருந்தால் அங்கு 68 சதவீதம் வாங்கியிருக்கின்றனர். கர்நாடகாவில் பாஜ அரசு இருந்த போது அதனுடைய கடன் சதவீதம் 86.6 இருந்தது. ஏற்கனவே நான் கூறியது போல, இந்தியாவில் ரூ.181 லட்சம் கோடிக்கான கடனை பா.ஜனதா ஆட்சி வாங்கி எதற்கெல்லாம் செலவழிக்கிறார்களோ, அதுபோலத்தான் நாங்களும் செலவழிக்கிறோம். தமிழக பெண்களுக்கு இந்த அரசு ஏதாவது நன்மையை செய்யும்போது, ஒரு பெண்ணான நீங்களே அதை தாழ்வாகக் கருதுவது எனக்கு வருத்தமளிக்கிறது.
வானதி சீனிவாசன்: பெண்களுக்கு வழங்கும் தொகையை நான் குறைத்து மதிப்பிடவில்லை. மற்ற மாநிலங்களுக்கு நான் சென்று வரும் நிலையில் எனக்கு தமிழகத்தின் வளர்ச்சியை பார்க்கும்போது பெருமையாக உள்ளது. ஆனால் அதற்கான பாராட்டு என்பது உங்களுக்கு மட்டுமல்ல, அது எல்லாருக்கும் பொதுவானது.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: நீங்கள் அவல் கொண்டு வாருங்கள், நான் உமி கொண்டு வருகிறேன், 2 பேரும் ஊதி ஊதி தின்போம் என்ற பழமொழி போல் வானதி பேசுகிறார். அவர் உமி மட்டும் கொண்டு வந்துவிட்டு, எங்களுடன் சேர்ந்து பாராட்டை எடுத்துக் கொள்வார்களாம். அதை நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமாம்.
நெல்லை – நயினார் நாகேந்திரன் (பாஜ): அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். என்று வரிசையாக வந்த முதல்வர்கள் எல்லாருக்குமே பங்கு என்ற அர்த்தத்தில் வானதி கூறினார்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: நீங்கள் கூறியவர்களால் தமிழகத்தில் வளர்ச்சி ஏற்பட்டது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வேன்.
இதில் நீங்கள் ஏன் வருகிறீர்கள்? உங்களுக்கு என்ன பங்கு உள்ளது?

வானதி சீனிவாசன்: பெண்கள் பெயரில் சொத்துப் பதிவின் போது பதிவுக் கட்டணத்தில் 1 சதவீதம் சலுகை தரப்பட்டுள்ளது. இது பெரிய மாற்றத்தை கொண்டு வராது. எனவே அதை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: சர்வ சிக் ஷா அபியானில் நீங்கள் நிறுத்தி வைத்துள்ள ரூ.2,162 கோடி, 100 நாள் வேலைத் திட்டத்தில் நிறுத்தி வைத்துள்ள ரூ.3,796 கோடி, ஜல்ஜீவன் திட்டத்தில் ரூ.3 ஆயிரம் கோடி பல்வேறு திட்டங்களுக்கு நாங்கள் கேட்கும் தொகை ஆகியவற்றை பகிர்ந்து கொடுத்து, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கு நீங்கள் காட்டும் கருணைப் பார்வையை எங்கள் மீதும் காட்டினால் நீங்கள் வைக்கும் கோரிக்கையை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

வானதி சீனிவாசன்: தனிநபர் வருமானம் தமிழகத்தைவிட மற்ற சில மாநிலங்களில் குறைவு. தமிழகத்திற்கு அளிக்கப்பட வேண்டிய பங்கு வந்துகொண்டுதான் இருக்கிறது.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: ஒவ்வொரு நிதிக்குழுவும் நமக்கு வர வேண்டிய நிதிப்பங்களிப்பை குறைத்துக் கொண்டே வருகின்றனர். இப்படி குறைத்து கொண்டே வரும் காரணத்தினால் நமக்கு வர வேண்டிய ரூ.2.63 லட்சம் கோடி இதுவரை வராமல் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.23 ஆயிரத்து 834 கோடி தமிழகத்திற்கு வந்தால்கூட, உத்தரபிரதேசத்திற்கு ரூ.87,990 கோடி, பீகாருக்கு ரூ.54,525 கோடி தரப்படுகிறது. ஆந்திராவுக்கு ரூ.3 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ.19,068 கோடி கடந்த 3 ஆண்டுகளுக்காக தரப்பட்டது.

ஆனால் உத்தரபிரதேசத்திற்கு ஒரே ஆண்டில் ரூ.19,858 கோடி தொகை வழங்கப்படுகிறது. இதை கேட்டால் நாங்கள் இணக்கமாக இருக்கவில்லை என்று கூறுகிறீர்கள். எங்கள் கொள்கை என்னவென்றால், உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதுதான். எங்கள் உரிமையையும், மொழி உரிமையையும், மொழிக் கொள்கையையும் விட்டுக் கொடுத்துவிட்டுதான், சமரசங்கள் செய்துகொண்டுதான் இந்த தொகையை நாங்கள் பெற வேண்டும் என்றால் இந்த அரசு அதற்கு ஒரு போதும் தயாராக இருக்காது. இவ்வாறு விவாதம் நடந்தது.

The post ஒன்றிய அரசின் பங்களிப்பு தொகையாக தமிழ்நாட்டுக்கு ரூ.2.63 லட்சம் கோடி நிலுவை: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: