பழங்குடி பட்டியல் ஆ.ராசா எம்.பி வலியுறுத்தல்

சென்னை: ஈரோடு மாவட்டத்தினை பழங்குடியினர் பட்டியலில் வரிசை எண் 25ல் மலையாளி இனத்தின்கீழ் சேர்த்து நாடாளுமன்றத்தில் சட்டமியற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஒன்றிய பழங்குடியினர் நல அமைச்சர் ஜுவல் ஓரம் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். பழங்குடியினர் பட்டியலில் வரிசை எண்.25-ல் மலையாளி இனமானது தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி சேர்க்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலையிலுள்ள சத்தியமங்கலம் தாலுக்கா மற்றும் பர்கூர் மலையிலுள்ள பவானி தாலுக்கா ஆகிய பகுதிகளில் வசிக்கும் மலையாளி இன மக்கள் பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் பெற இயலாத நிலையில், இவர்களை பழங்குடியினர் பட்டியலில் வரிசை எண்25-ல் மலையாளி இனத்தின்கீழ் சேர்த்திட ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், தற்போது மாநில அரசின் சார்பாக நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஒன்றிய பழங்குடியினர் நல அமைச்சர் ஜுவல் ஓரம் நேற்று நேரில் சந்தித்து, ஈரோடு மாவட்டத்தினை பழங்குடியினர் பட்டியலில் வரிசை எண்.25ல் மலையாளி இனத்தின்கீழ் சேர்த்து சட்டமியற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post பழங்குடி பட்டியல் ஆ.ராசா எம்.பி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: