சென்னை: தமிழகம் முழுவதும் சாலைகள் அமைக்க இந்த ஆண்டு கூடுதலாக ரூ.850 கோடியை முதல்வர் வழங்கியுள்ளார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று திண்டிவனம் பொ.அர்ஜூனன் (அதிமுக) பேசுகையில், ‘‘திண்டிவனம் நகராட்சி, வார்டு 26, நாகலாபுரம் ஜாய்ஸ் பொன்னையா தெருவில் அமைந்திருந்த பாலம் 2021ம் ஆண்டு பெய்த கனமழையால் முழுவதுமாக சேதமடைந்தது. இதனால் அந்த பாலத்தை தினமும் பயன்படுத்தும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து ஏற்கனவே 2021ம் ஆண்டு கோரிக்கை வைத்தேன். இதுவரை பாலம் அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திண்டிவனம் மக்களின் மிக அவசியமான இந்தக் கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, உறுப்பினர் கேட்ட அந்தச் சாலை நெடுஞ்சாலைக்கும், நகராட்சிக்கும் சேர்ந்த இடமாக இருக்கிறது. அது எந்த சாலை என்று குறிப்பிட்டு எழுதி தருவார்கள் என்றால் அந்த பாலம் கட்டப்படும். ஏனென்றால் இந்த ஆண்டு பல இடங்களில் சாலைகள் போடுவதற்காக கூடுதலாக நிதி கிட்டத்தட்ட ரூ.850 கோடியை முதல்வர் வழங்கியிருக்கிறார். எனவே, அந்தச் சாலையை கணக்கிட்டு உங்களுக்கு உடனடியாக செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
The post தமிழகம் முழுவதும் சாலைகள் அமைக்க கூடுதலாக ரூ.850 கோடியை முதல்வர் வழங்கியுள்ளார்: அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.