அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் ரிங் ரோடு அருகே புதுக்குளம் கண்மாய் பகுதியில் பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை பெருங்குடி போலீசார் நேற்று முன்தினம் மீட்டனர். விசாரணையில் மீட்கப்பட்டவர், விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அழகாபுரி கொக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மலையரசன் (36) என்பது தெரியவந்தது. இவர் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் தனிப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். மனைவி பாண்டிச்செல்வி, கடந்த வாரம் திருச்சுழி – ராமநாதபுரம் சாலையில் மிளகனூர் அருகே வாகன விபத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவி சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் கட்டணம் தொடர்பான ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாங்குவதற்காக மலையரசன் மதுரை வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில்தான் மருத்துவமனையில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ள புதுக்குளம் கண்மாய் பகுதியில் பாதி எரிந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். யாரேனும் இவரை கொலை செய்து எரித்து விட்டு சென்றனரா அல்லது மனைவி இறந்த துக்கத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? என பெருங்குடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மருத்துவமனைக்கு அருகே சாலையோரத்தில் மலையரசனின் செல்போனும், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அவரது டூவீலரும் நிறுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மலையரசன் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
The post கண்மாயில் கருகிய நிலையில் சடலம்: சிவகங்கை போலீஸ்காரர் எரித்துக் கொலை appeared first on Dinakaran.