திடீரென அந்த கும்பல் ஜான் காரின் பின்புறம் மோதினர். பின்னர் 4 பேர் கொண்ட கும்பல் கார் கண்ணாடியை அடித்து உடைத்துவிட்டு உள்ளே இருந்த அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் ஜானை வெட்டினர். அவர்களிடமிருந்து தப்பிக்க காரின் பின்புற சீட்டிற்கு சென்றார். எனினும் மனைவி கண் முன்பே கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. உடனே சரண்யா இறங்கி மர்மநபர்களை தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் கையில் வெட்டு விழுந்தது. இதனால் அவர் தப்பி சென்றார். இதன்பின்னர் அந்த கும்பல் ஜானை காருக்குள் நான்கு புறமும் சுற்றிவளைத்து தலை, கழுத்து, கைகளில் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதை உறுதிப்படுத்திய கொலையாளிகள் பின்னர் தாங்கள் வந்த காரில் ஏறி தப்பினர்.
ஆனால், கார் சிறிது தூரம் சென்றதும் பழுதடைந்தது. இதையடுத்து கும்பல் காரை விட்டு இறங்கி தப்பியோட முயன்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் 3 பேரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் வந்து கையில் வெட்டுக்காயம் அடைந்த ஜானின் மனைவி சரண்யாவை மீட்டு நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிடிபட்ட கொலையாளிகள், சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பூபாலன், சரவணன், சதீஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். ஆனால் வழியில் போலீசாரை தாக்கிவிட்டு 3 பேரும் தப்பியோடினர். இதில் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீஸ்காரர் யோகராஜ் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.
எனினும் இன்ஸ்பெக்டர் ரவி வானில் 2 முறை துப்பாக்கியால் சுட்டு அவர்களை சரணடையும்படி எச்சரித்தார். மீறியும் தப்பி ஓடியதால் போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டு 3 பேரையும் பிடித்தனர். காயமடைந்த போலீசார் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், கொலையாளிகள் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். ஜானை வெட்டும்போது கும்பலை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் இடது கையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அருகில் இருந்த பேக்கரி ஒன்றில் பதுங்கினார். அவரையும் போலீசார் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். பட்டப்பகலில் சினிமா பாணியில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் சித்தோடு பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
The post ஈரோடு அருகே காருக்குள் மனைவி கண் முன்பு சேலம் ரவுடி கொடூரமாக வெட்டிக்கொலை: தப்ப முயன்ற கொலையாளிகளை சுட்டுப்பிடித்த போலீஸ் appeared first on Dinakaran.