நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்: இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

நெல்லை: நெல்லை டவுன், மூர்த்தி ஜஹான் தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர்உசேன் பிஜிலி (58). இவர் அப்பகுதியிலுள்ள முர்தீன் ஜஹான் தைக்கா பரம்பரை முத்தவல்லியாக இருந்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை தொழுகை முடிந்து திரும்பியோது இவரை மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. டவுன் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த முஸ்லிமாக மதம் மாறி திருமணம் செய்து கொண்ட கிருஷ்ணமூர்த்தி என்ற தெளபீக் என்பவருக்கும், ஜாகிர்உசேன் பிஜிலிக்கும் வக்பு இடம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இதில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய கார்த்திக்(32), அக்பர்ஷா (32) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் நெல்லை ஜே.எம்.3 கோர்ட்டில் சரணடைந்தனர்.

முக்கிய குற்றவாளியான தௌபீக் மற்றும் அவரது மனைவி நுருல் நிஷா ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதற்கிடையே, முக்கிய குற்றவாளியை கைது செய்யவும், கொலைக்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி ஜாகீர் உசேன் பிஜிலியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி நேற்று காலை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து உடலை பெற்றுச் சென்று நேற்று இரவு அடக்கம் செய்தனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி என்ற தௌபீக், நெல்லையில் இருந்து கன்னியாகுமரி செல்வதற்காக நேற்று மதியம் ரெட்டியார்பட்டி நான்குவழிச்சாலை அருகே ராஜகோபாலபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்ஐ அருணாச்சலம் தலைமையிலான தனிப்படை போலீசார் 5 பேர் அங்கு சென்று அவரை சுற்றி வளைத்தனர். உடனே அவர் அரிவாளால் போலீஸ் ஏட்டு ஆனந்தின் இடது தோள்பட்டையில் வெட்டினார்.

இதனால் போலீசார் தௌபீக்கின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சுருண்டு விழுந்த அவரை போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அரிவாளால் வெட்டப்பட்ட ஏட்டு ஆனந்தும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். தலைமறைவாக உள்ள ெதளபீக்கின் மனைவி நுருல் நிஷாவை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே ஜாகீர் உசேன் பிஜிலி கொடுத்த புகாரை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்காத நெல்லை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நெல்லை டவுண் உதவி கமிஷனராக இருந்த செந்தில்குமார் தற்போது கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பணிபுரிகிறார் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி பரிந்துரைத்துள்ளார்.

The post நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்: இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: