சென்னையில் ரூ.2000 கட்டணத்தில் பஸ் பாஸ் ஏசி தொடங்கி சாதாரண பேருந்து வரை விருப்பம்போல் பயணிக்கலாம்: அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர்

சென்னை: மாநகர போக்குவரத்து கழகம் மூலம் 50 குளிர்சாதன (ஏசி) பேருந்துகள் உள்பட 3,056 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தினசரி பயணிக்கிறார்கள். அலுவலகம் செல்வோருக்கு வசதியாக இருவழி பயண அட்டை, விருப்பம்போல் பயணிக்க மாதாந்திர பயண அட்டை என பல்வேறு சலுகை கட்டணங்களை மாநகர் போக்குவரத்து கழகம் இதுவரையில் வழங்கி வருகிறது. இதில் மாதம்தோறும் ரூ.1,000 கட்டணமாக செலுத்தி பெறப்படும் பயணச் சலுகை அட்டை மூலம் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் குளிர்சாதனப் பேருந்துகளை தவிர்த்து, சாதாரணப் பேருந்து, விரைவுப் பேருந்து, சொகுசுப் பேருந்து, சிற்றுந்து ஆகியவற்றில் பயணிகள் விருப்பம்போல் பயணிக்கலாம்.

இந்த நிலையில், பயணிகளுக்கு மேலும் ஒரு சலுகையாக ரூபாய் 2000க்கு புதிய பயண சலுகை கட்டண அட்டையை போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய சலுகை கட்டண அட்டை மூலம் குளிர்சாதனப் பேருந்துகளிலும் பயணிகள் விருப்பம் போல் பயணம் செய்யலாம். இந்த அட்டையைப் பெறுபவர்கள் மாநகர் போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும், குளிர்சாதன பேருந்து, சாதாரணப் பேருந்து, விரைவுப் பேருந்து, சொகுசுப் பேருந்து, சிற்றுந்து ஆகியவற்றில் பயணிகள் விருப்பம்போல் பயணிக்கலாம்.

தற்போது கோடை காலம் துவங்குவதால் வெப்பம் தணிக்க பலரும் ஏசி பேருந்துகளில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு ரூ.2,000 கட்டணம் கொண்ட பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது திருப்போரூர், சிறுசேரி டெக் பார்க், கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதிய பேருந்துகள் வந்ததும், தேவைக்கேற்ப பல்வேறு வழித்தடங்களிலும் இயக்க திட்டமிட்டுள்ள மாநகர் போக்குவரத்து கழகம் அதற்காக 225 ஏசி பேருந்துகள் உட்பட 650 மின்சார பேருந்துகளை விரைவில் கொள்முதல் செய்யப்படவுள்ளது. இத்திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மந்தவெளி பேருந்து நிலையத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

* ஆட்டோ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை..
ரூ.2000 பாஸ் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆட்டோ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம். பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்போம். குறிப்பிட்ட சில சங்கங்கள் தான் போராட்டம் நடத்துகின்றனர். முடிவு எட்டப்படுகின்ற நேரத்தில் பொதுமக்களுக்கு பாதகமான ஏற்படுகின்ற சூழலை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

The post சென்னையில் ரூ.2000 கட்டணத்தில் பஸ் பாஸ் ஏசி தொடங்கி சாதாரண பேருந்து வரை விருப்பம்போல் பயணிக்கலாம்: அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் appeared first on Dinakaran.

Related Stories: