தமிழர் விரோதி பாஜவை தமிழ்நாட்டில் தோற்கடிப்போம்: இந்து மகாசபா போஸ்டரால் பரபரப்பு

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் பாஜ கட்சிக்கு எதிராக இந்து மகாசபா சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களில் ‘தமிழர் விரோத பாஜவை தமிழ்நாட்டில் தோற்கடிப்போம். ஒடிசா மாநிலத்தில் முதலமைச்சராக ஒரு தமிழரை வரவிட மாட்டோம்’ என்று சொல்லி, ஜெகநாதர் கோயில் பொக்கிஷ அறை சாவியை தமிழ்நாட்டுக்கு கொண்டு சென்றுவிட்டார் என்று பொய் சொல்லி அவதூறு பரப்பி, எங்கள் மண்ணின் மைந்தர் பிகே.பாண்டியன் மீது அவதூறு பேசிய மொழிவெறி பாஜ தலைவர்களை தமிழ்நாட்டில் கால் ஊன்றி வெற்றி பெற விடமாட்டோம். நாங்க முதலில் தமிழன்டா… அப்புறம்தாண்டா இந்து. தமிழன் தன்மான பேரவை, தமிழ்நாடு இந்து மகா சபா, கூத்தப்பன்பட்டி மேலூர்’ என அச்சிடப்பட்டுள்ளது.

* கொரோனா பாதிச்ச பொண்ண என் ரூம்க்கு அனுப்புனாங்க.. ஜெயில் ரகசியத்தை சொல்லும் சசிகலா
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மரக்கடை பேருந்து நிறுத்தம் பகுதியில் அஇபுதமமுக வேட்பாளர் தர்மராஜை ஆதரித்து பொதுச்செயலாளர் சசிகலா நேற்று இரவு தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
அதிமுகவின் பொதுச்செயலாளராக வேண்டும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. தொண்டர்கள்தான் என்னை பொதுச்செயலாளர் ஆக்கினர். அதன்பின் நான் சிறைக்கு செல்ல நேர்ந்தது. அப்போது ஒருவரை (எடப்பாடி) முதலமைச்சர் ஆக்கிவிட்டு சென்றேன். ஆனால் சிறைக்கு சென்று மூன்று மாதத்திற்கு பின் என்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தூக்கினார்கள். ஏன் தூக்கினார்கள் என தெரியவில்லை. நான் சிறையில் இருந்தபோது கொரோனா காலத்தில் யாருக்குமே கொரோனா இல்லை. ஆனால் பெண்கள் பகுதியில் என்னுடைய அறையில் கொரோனா பாதித்த பெண்ணை உள்ளே அனுப்பினார்கள்.

அதற்குப்பின் எனக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 85 சதவீதம் உடல்நலம் எனக்கு பாதிக்கப்பட்டது. யாருக்குமே கொராேனா இல்லாத காலத்தில் எனக்கு மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு பின்னர்தான் என்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எடப்பாடி தொகுதியில் வேட்பாளராக வேறு யாரும் இருக்கக் கூடாது என்பதற்காக ஒருவரை தூக்கிவிட்டனர். அங்கு யாரையும் நிற்க விடவில்லை. அந்த அளவுக்கு கொடூரமாக நடக்கின்றனர். ஆனால் அந்த தொகுதியிலும் நமது கட்சி வேட்பாளரை நிறுத்தியுள்ளேன். அங்கும் சென்று பிரசாரம் செய்வேன். திருமணத்திற்கு சீப்பை ஒளித்து வைப்பது போல நடந்தால் அது எப்படி நடக்கும்? இவ்வாறு கூறினார்.

* ஒன்றிய அரசின் எடுபிடியாக மாறிய தேர்தல் ஆணையம்: வைகோ குற்றச்சாட்டு
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசின் எடுபடியாக மாறிவிட்டது. தலைமை செயலாளரை மாற்றிவிட்டு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தனி செயலாளராக இருந்தவரை தலைமை செயலாளராக அறிவிப்பது பாரபட்சம் மட்டும் இன்றி, ஒரு சார்பு ஆதரவாக செயல்படுவதற்காக இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் செய்து இருக்கிறது. முதல்வர் வாகனம் சோதனை செய்யப்பட்டது. யார் காரில் சென்றாலும் சோதனை செய்யலாம் என்றால் மோடி செல்லும் காரில் சோதனை செய்வீர்களா? அமித்ஷா வாகனத்தை தேர்தல் ஆணையம் சோதனை செய்யுமா?. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூடுதல் இடம் வெற்றி பெற்று தனிப் பெருபான்மையுடன் ஆட்சி அமைக்கும். இவ்வாறு பேசினார்.

* வாக்குப்பதிவை வீடியோ எடுத்து வெளியிட்ட தவெகவினர்
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வாக்குச்சாவடி மையத்துக்குள் மொபைல் போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் மண்ணாடிப்பட்டு தொகுதியில் வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து மர்ம நபர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தாமரை சின்னத்துக்கு வாக்களிப்பதையும், பின்னர் விவிபாட் இயந்திரத்தில் சின்னம் தெரிவதையும் வீடியோ எடுத்து வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து, தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் தவெகவினர் அனுமதி மீறி வாக்குச்சாவடி மையத்துக்குள் மொபைல் போனை எடுத்து சென்று, விசில் சின்னத்தில் வாக்களித்துவிட்டு டிவிகே விர்ச்சுவல் வாரியர் என்ற சமூகவலைதள பக்க குழுவில் பகிர்ந்துள்ளனர். இது போன்ற பதிவுகளை சைபர் போலீஸ் உதவியுடன், ஸ்டெப் டவுன் நோட்டீஸ் கொடுத்து நீக்கி வருகின்றனர். அதன்படி இப்பதிவுகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்மந்தப்பட்ட நபர் குறித்து சைபர் உதவியுடன் விசாரித்து வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: