பணப்பட்டுவாடா நடப்பதாக வந்த புகாரில், கடலூர் தவெக வேட்பாளர் ராஜ்குமாரின் மனைவி சரளாதேவியின் சகோதரர் புகழேந்தி என்பவருக்கு சொந்தமான பேக்கரி மற்றும் ஸ்வீட் கடையில் சென்னையில் இருந்து ஒன்றிய அரசின் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் மாலை திடீரென வந்து கடலூர் தொகுதி தேர்தல் பறக்கும் படையினருடன் சோதனை செய்தனர். தொடர்ந்து கடலூர் எஸ்.என் சாவடியில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை தொடரப்பட்டது.
நேற்று அதிகாலை 1.30 மணி வரை சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தவெகவினர் கடலூர் எஸ்.என் சாவடியில் உள்ள கட்சி அலுவலகம் முன்பும், வருமான வரித்துறை அலுவலகம் முன்பும் திரண்டதால் பரபரப்பு நிலவியது. நேற்று 2வது நாளாக நடந்த ரெய்டில் தவெக வேட்பாளர் உறவினர் புகழேந்தி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு, இதில் வங்கி கணக்கில் பல லட்சங்களும், வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் பணமும், ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.
வீட்டில் போலீஸ் காவலில் தவெக வேட்பாளர் உறவினர் புகழேந்தி வைக்கப்பட்டார். மேலும் வருமான வரித்துறை அதிகாரிகளும் தொடர்ந்து வீட்டிலேயே முகாமிட்டு, விசாரித்தனர். இது இரவு வரை நீடித்தது. கடலூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடிகர் விஜய் மேற்கொள்ள இருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
