நாமக்கல் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராணியை ஆதரித்து, துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., நேற்று பிரசாரம் செய்தார். வேட்பாளருடன் திறந்த வேனில் சென்றவாறு வீதி, வீதியாக வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது: கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவுடன் கூட்டணி இல்லை என்ற அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தற்போது கூட்டணி வைத்துள்ளார்.
பல மாநிலங்களில் பாஜவுடன் கூட்டணி வைத்தவர்கள் நிலை என்ன ஆனது என்று உங்களுக்கு தெரியும். பீகார் மாநிலத்தில் பல ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த நிதீஷ்குமார், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக மாறி விட்டார். எடப்பாடி பழனிசாமி அவர்களே, பார்த்து பத்திரமாக இருந்து கொள்ளுங்கள். தேர்தலுக்கு பிறகு ஏதாவது ஒரு மாநிலத்துக்கு உங்களை கவர்னராக அனுப்பி விடுவார்கள்.
சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சரானவர் எடப்பாடி பழனிசாமி. அந்த சசிகலாவுக்கே கட்சியில் இடமில்லை என கூறி விட்டார். எடப்பாடிக்கு முன்பு அதிமுகவில் முதலமைச்சராக ஓபிஎஸ் இருந்தார். அவருக்கும் கட்சியில் இடமில்லை. அவர் தமிழகத்தை தளபதியால் தான் காப்பாற்ற முடியும் எனக்கூறி திமுகவில் இணைந்து விட்டார்.
அதிமுக, தற்போது அமித்ஷா திமுக ஆகிவிட்டது. பாஜ சொல்லும் அடிமை வேலைகளை, எடப்பாடி பழனிசாமி சரியாக செய்து கொடுப்பார். தோல்வி பயத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டது. அதனால், மிகவும் கீழ்த்தரமாக முதல்வரை விமர்சித்து வருகிறார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு, அவருக்கு இங்கு வேலை இல்லை. மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு கனிமொழி எம்.பி., பேசினார்.
