கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, சின்னசேலம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நைனார்பாளையம் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் மாலதியை ஆதரித்து அக்கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது: திமுக கூட்டணி தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டிப்பாக வெற்றிபெறும். அதில் கள்ளக்குறிச்சி ஒன்றாக இருக்கும். நாம் கடந்த 2016லிருந்து திமுக கூட்டணியில் பயணித்து பல தேர்தல்களை சந்தித்துள்ளோம்.
மேலும் இரு எம்பிக்களை பெற்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளோம். ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை பாஜ கூட்டணியை அறவே வெறுத்தார். மோடியா இந்த லேடியா என்று சவால் விட்டார். அந்த கட்சியுடன் எடப்பாடி இப்போது கூட்டணி வைத்துள்ளார். இப்போது ஒரு நடிகர் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று கூவி அழைத்தார். யாரும் செல்லவில்லை.
ஆனால் திமுகவுடன் பல்வேறு கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளது. பிஜேபி மக்களை பிளவுபடுத்தும் சக்தி, சமூக நீதி வேண்டாம் என்கிற கட்சி. அறிவியல் சிந்தனைகள் வளரக்கூடாது என்று நினைக்கும் கட்சி. இதையெல்லாம் எதிர்த்து அரசியல் செய்பவர் தலைவர் ஸ்டாலின். அதனால்தான் நாம் திமுக கூட்டணியில் தொடர்ந்து உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
