அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சில தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார். இதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் கொளத்தூர் தொகுதியில் பிரசாரம் செய்த எடப்பாடி, திமுக ஆட்சியில் கொரோனா வந்திருந்தால் இவரே போயிருப்பார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து பேசினார்.
இதற்கு பதிலடி தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘மரணத்தை கண்டு பயப்படுபவன் நான் அல்ல’’ என்று பதிலடி தந்தார். முதல்வர் குறித்து எடப்பாடி பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், நான் அப்படி பேசவில்லை என அந்தர் பல்டி அடித்து உள்ளார். நேற்று சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமுக்கு ஆதரவாக டாக்டர் நடேசன் சாலை, இருசப்ப தெருவில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: கொரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் ஸ்டாலின் சரியான ஆலோசனை கொடுக்கவில்லை. அப்போது எங்கே காணாமல் போனீர்கள் என்று கேட்டேன். காணாமல் போனார் என்றுதான் பேசினேனே ஒழிய தவறாகப் பேசவில்லை. 51 ஆண்டுகாலம் நான் யாரையும் விமர்சிக்கவில்லை. என்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த இயக்கம் தோற்றுவித்ததே ஏழைகளை காக்க வேண்டும் என்பதுதான். ஜெயலலிதா வழியில் சிறப்பான ஆட்சியை வழங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
