எடப்பாடிக்கு ரூ.5000 கோடி கிடைக்கறத தடுத்துட்டேன்: என்மேல கொலவெறில இருக்காரு… கொளுத்தி போட்ட செங்ஸ்

கோபி சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி எழுந்தபோது தமிழகத்தில் இரண்டு பெயர்கள் தான் முன் நின்றன. ஒன்று நான், மற்றொன்று எடப்பாடி பழனிசாமி. அப்போது நான் அவரிடம், எனக்கு முதல்வர் பதவியை விடக் கழகம் உடைந்துவிடக் கூடாது என்பதே முக்கியம் என்று கூறிவிட்டு, அனைவரும் இணைந்து பணியாற்ற வழிவகை செய்தேன்.

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆன பிறகும், நாம் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என்று தான் நான் கூறினேன். ஆனால், 1989ல் கழகத்திற்கு வந்து, அனைத்துப் பதவிகளையும் அனுபவித்துவிட்டு, இன்று கட்சிக்காக உழைப்பவர்களையே நீக்குகிறார்கள் என்றால் அதன் போக்கை நீங்களே பாருங்கள். பத்து முறை வேட்புமனுத் தாக்கல் செய்த அனுபவம் கொண்ட எனக்கு, அதில் ஒரு சிறு குறை இருக்குமா என்பது தெரியாதா? வேண்டுமென்றே என் மீது புகார் அளிக்கின்றனர்.

ஆனால், மனு சரியாக இருப்பதாகத் தேர்தல் நடத்தும் அலுவலரே தெரிவித்துவிட்டார். எடப்பாடி பழனிசாமி, விஜய்யை ஆதரித்து, அவர் மூலமாக முதல்வராகி ஐந்தாயிரம் கோடி சம்பாதிக்கலாம் என்று நினைத்தார். அதற்கு நான் விடவில்லை. அதனால் தான் என் மீது கொலை வெறியில் உள்ளார். பத்து முறை தோல்வியைக் கண்டவர்கள் இன்று என்னைப் பற்றிப் பேசுகிறார்கள்.

கோபிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி என்னை துரோகி என்கிறார். நான் முதல்வர் பதவியையும், பொதுச்செயலாளர் பதவியையும் விட்டுக்கொடுத்தது தான் அவருக்குத் துரோகமாகத் தெரிகிறதா? என்னை இந்தத் தொகுதியில் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று அவர் கூறுகிறார். ஆனால், மக்களின் மனநிலை என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு எடை போடத் தெரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: